செங்கல் விலை உயரும் அபாயம்.!

குமரியில் தொடர் மழை செம்மண் குவாரிக்கு அனுமதி மறுப்பு வாழ்வாதாரம் பாதிப்பால் தொழிலாளர்கள் தவிப்பு. 

குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை, செம்மண் குவாரிகளுக்கு அரசு அனுமதி மறுப்பு ஆகியவற்றால் மாவட்டத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழப்பு மற்றும் செங்கல் விலை கிடுகிடுவென உயர்வு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

குமரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக இருந்து வரும் செங்கல் உற்பத்தி  கனமழையால் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். 

தொழிற்சாலைகள் இல்லாத கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயமே முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. அதற்கு அடுத்த படியாக பிரதான தொழிலாக இருந்து வருவது செங்கல் உற்பத்தியாகும்.
இங்கு உற்பத்தியாகும் செங்கல்கள் தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் மதிப்பு வாய்ந்ததாகும். தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதமாக பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் செம்மண் அள்ள குவாரிகளுக்கு அரசு தடை விதித்துள்ளதாலும் செங்கல் உற்பத்தி தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது.
குமரி மாவட்டத்தில் பொற்றையடி, கொட்டாரம், அச்சன்குளம், மந்தாரம்புதூர், அருமநல்லூர், தெள்ளாந்தி, ஆரல்வாய்மொழி, தோவாளை, சீதப்பால், கோழிகோட்டு பொத்தை என மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் செங்கல் உற்பத்தி செய்யும் சூளைகள் இருந்து வருகிறது.
இந்த செங்கல் சூளைகளில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் செங்கல் உற்பத்தி தொழில் முற்றிலுமாக முடங்கி உள்ளதால் இந்த தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். கடந்த இரண்டு மாதங்களாக செங்கல் உற்பத்தி இல்லாததால் தொழிலாளர்கள் வருமானம் ஏதுமின்றி உணவு, மருத்துவம், குழந்தைகளுக்கு கல்வி செலவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கூட நிறைவேற்ற முடியாமல் திணறி வருகின்றனர்.
மேலும் ஒரு செங்கலின் விலை தற்போது ரூ.7-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து செம்மண் தட்டுப்பாடு நிலவினால் ஒரு செங்கல் விலை ரூ.10 வரை உயர வாய்ப்புள்ளதாக சூளை உரிமையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எனவே விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும் செங்கல் சூளை தொழிலாளிகள், உரிமையாளர்கள் நலன் கருதியும் செம்மண் எடுக்கவும், மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்கவும் அரசு முன்வர வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!