மதுரை மாவட்டம் கள்ளிக்குடியில் புதிய வட்டாட்சியர் அலுவலகத்திற்கான பூமி பூஜை விழாவில் கலந்துகொண்டு அவ்வழியே சென்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அங்கு கூட்டம் நிற்பதை பார்த்து என்ன ஏதுவென்று விசாரித்துள்ளார்.
`வீட்டுக் கடனை திருப்பி செலுத்தாததால் செல்வராஜ் என்பவரின் வீட்டை வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்ய வந்த நிலையில், அந்த பக்கமாக சென்றுகொண்டிருந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தன் சொந்த பணத்தை வழங்கி வீட்டை மீட்டு கொடுத்தது’ திருமங்கலம் வட்டாரத்தில் பேசுபொருள் ஆகியிருக்கிறது.
மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே சொக்கம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். கூலித்தொழிலாளியான இவர் வீடு கட்டுவதற்காக தனியார் வங்கியில் கடன் பெற்றுபெற்று முறையாக திரும்பி செலுத்தி வந்தார்.
இந்த நிலையில் கொரோனா பேரிடரால் கேரளாவில் பணியாற்றி வந்த 2 மகன்களுக்கு வேலை போனதாலும், உள்ளூரில் வேலை இல்லாததாலும் வருவாய் இல்லாமல் தவித்து வந்த செல்வராஜால் வங்கிக் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பலமுறை கடனை கேட்டு பார்த்த, தனியார் வங்கியினர் இறுதியாக நீதிமன்றத்தை நாடியுளளனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் சொக்கம்பட்டியிலுள்ள செல்லவராஜின் வீட்டை ஜப்தி செய்ய வங்கி ஊழியர்களும் நீதிமன்ற ஊழியர்களும் நேற்று மதியம் வந்தனர்.
வீட்டில் இருந்தவர்களை வெளியேறும்படி ஊழியர்கள் கூறியதால், என்ன செயவதென்று தெரியாமல் செல்வராஜும் அவர் குடும்பத்தினரும் அதிர்ச்சியானவர்கள், வங்கி ஊழியர்களிடம் கடனை திருப்பி செலுத்த அவகாசம் கேட்டு கண்ணீருடன் கெஞ்சியுள்ளனர்.
ஆனால், அதற்கு வங்கி ஊழியர்கள் சம்மதிக்கவில்லை. ஜப்தி செய்து வீட்டை கையகப்படுத்துவதில் குறியாக இருந்தனர். இதனால் அந்த இடத்தில் கூட்டம் கூடி நின்றது.
அந்த நேரம் கள்ளிக்குடியில் புதிய வட்டாட்சியர் அலுவலகத்திற்கான பூமி பூஜை விழாவில் கலந்துகொண்டு அவ்வழியே சென்ற அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், அங்கு கூட்டம் நிற்பதை பார்த்து என்ன ஏதுவென்று விசாரித்துள்ளார்.
அங்கு வங்கி அதிகாரிகளிடம் மன்றாடிக்கொண்டிருக்கும் செல்வராஜை பார்த்தார். உடனே காரைவிட்டு இறங்கியவர், விவசாயி செல்வராஜுக்கு தவணை செலுத்த அவகாசம் வழங்குங்கள் என கேட்டுள்ளார். அதனை ஒப்புக்கொள்ளாத வங்கி ஊழியர்கள், நீதிமன்ற உத்தரவை காண்பித்தனர். குறிப்பிட்ட ஒரு தொகையை இப்போது தந்தால்தான் ஜப்தி நடவடிக்கையை நிறுத்த முடியும் என்றனர்
உடனே ஆர்.பி.உதயகுமார், தன் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை வங்கி ஊழியர்களிடம் கொடுத்து ஜப்தி நடவடிக்கையை நிறுத்தியவர், செல்வராஜ் குடும்பத்தினர் மீதித்தொகையை செலுத்த கால அவகாசமும் பெற்று கொடுத்தார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத செல்வராஜ் குடும்பத்தினர் மிகவும் நெகிழ்ந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு நன்றி சொன்னார்கள். `அமைச்சர் மட்டும் யதேச்சையாக அந்த வழியில் வராமல் இருந்திருந்தால் வீட்டை இழந்து நடுத்தெருவில் நின்றிருப்போம்’ என்றனர்.
ஜப்தியாகவிருந்த கூலித்தொழிலாளியின் வீட்டை ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து மீட்டுக்கொடுத்த அமைச்சரின் செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது