தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு லாரி 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திராவில் இருந்து சிமென்ட் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி ஒன்று தருமபுரியைக் கடந்து சேலம் நோக்கி (டிச.12) சென்று கொண்டிருந்தது. பிற்பகலில் தொப்பூர் கணவாய் பகுதியில் பயணித்தபோது அந்த லாரியின் பிரேக் திடீரென பழுதடைந்தது.
தொப்பூர் அருகே சிறிய விபத்து நடந்ததால் அந்தச் சாலையில் இரட்டைப் பாலம் பகுதியில் வாகனங்கள் மிக மெதுவாகச் சென்று கொண்டிருந்தன. இந்நிலையில், பிரேக் பழுதடைந்த லாரியை கட்டுப்படுத்த முடியாததால் முன்னால் சென்று கொண்டிருந்த கார்கள், குட்டி யானை வாகனங்கள் என 10க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது.
இந்த விபத்தில் வேறு வேறு கார்களில் பயணித்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயங்களுடன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
விபத்தால் 2 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து நடந்த பகுதியை மாவட்ட ஆட்சியர் கார்த்திகா நேரில் சென்று பார்வையிட்டார். 10க்கும் மேற்பட்ட கார்களில் லாரி மோரி கோர விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.