சென்னை: தமிழகத்தில் கள்ளச் சாராயத்தை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 5 பேர் உயிரிழந்ததாகவும், 10-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்திகள் கவலை அளிக்கின்றன. திமுக ஆட்சியில் கள்ளச் சாராயம் ஆறாக ஓடுவதை தொடர்ச்சியாக நான் சுட்டிக்காட்டி வந்தும், இதனால் ஏற்கெனவே பல உயிரிழப்புகள் ஏற்பட்ட பிறகும்கூட, கள்ளச் சாராயத்தை ஒழிக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறேன். ‘கள்ளச் சாராயம் இல்லை, மெத்தனால்’ என்று சொன்னதுபோல, மக்கள் வாழ்க்கை விஷயத்தில் வார்த்தை விளையாட்டு விளையாடாமல், கள்ளச் சாராயத்துக்கு எந்த பெயர் இருந்தாலும் அதை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும், துயரத்தையும் தருகிறது. தொடர்ச்சியாக விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில்; கள்ளச்சாராயம் காய்ச்சுவதும், அதை விற்பதனால் உயிர்பலி ஆவதும் தொடர்கதையாகவுள்ளது. கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்கள், அதனை விற்பவர்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும். இனிவரும் காலங்களில்
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு மாவட்ட நிர்வாகம் விழிப்புணர்வுடன் செயல்படவேண்டும்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை: மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில் கள்ளச் சாராயத்துக்கு 23 உயிர்களை பறிகொடுத்து ஓராண்டு ஆகும் நிலையில், மீண்டும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்த, திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழகம் முழுவதும் ஆறாக ஓடும் கள்ளச் சாராய விற்பனையை தடுக்காததால், தொடர்ந்து நேரிடும் உயிரிழப்புகளுக்கு மதுவிலக்கு துறை அமைச்சர் முழு பொறுப்பேற்க வேண்டும். அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: மது, கள்ளச் சாராயத்தை கட்டுப்படுத்த தமிழக அரசும், காவல் துறையும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு முதல்வர்தான் பொறுப்பேற்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, தொடர்ந்து கள்ளச் சாராய விற்பனை நடைபெறுவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும், இது மக்களுக்கான ஆட்சியாக அமையவில்லை என்பதையே காட்டுகிறது. தமிழக அரசு, இனியாவது மாநிலத்தில் கள்ளச் சாராயம் இல்லை என்ற நிலையை ஏற்படுத்த, சட்டம் – ஒழுங்கில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: கடந்த ஆண்டு மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 23 பேர் உயிரிழந்துள்ள சூழ்நிலையில், தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் கடமை தவறிய காவல்துறையினர் உட்பட தவறிழைத்தவர்கள் அனைவரின் மீதும் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்க வேண்டும்.
மேலும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், சசிகலா உள்ளிட்டோரும் கள்ளச்சாராய இறப்புகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.