சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் அமைந்துள்ள கலங்கரைவிளக்கத்தின் மேல்பகுதிக்கு எளிதாகசெல்ல லிப்ட் அமைப்பதற்கான சாரம் கட்டும்பணி தொடங்கியது.
நவீன தகவல்தொடர்பு சாதனங்கள் இல்லாத காலங்களில் கடலில் செல்லும் கப்பல்கள் திசைமாறிச் செல்லாமல் இருக்கவும், கப்பல் மற்றும் மீனவர்களுக்கு கரைகளை தெரிந்துகொள்ளும் வழிகாட்டியாகவும் அமைக்கப்பட்ட கலங்கரைவிளக்கங்கள் இன்றளவும் சிறப்பான சேவையாற்றி வருகிறது.
மத்திய அரசின்
கப்பல் போக்குவரத்து துறையின் கட்டுபாட்டின் கீழ் உள்ள இந்த கலங்கரைவிளக்கங்கள் இந்தியாவின் பல்வேறு துறைமுக நகரங்களில் உள்ளது.
தமிழகத்தில் சென்னை, மகாபலிபுரம், நாகப்பட்டினம், வேதாரண்யம், ராமேஸ்வரம், தூத்துக்குடி, மணப்பாடு, கன்னியாகுமரி, குளச்சல் வரை கடலோரபகுதி துறைமுக நகரங்களில் கலங்கரை விளக்கங்கள் அமைந்துள்ளது.
கன்னியாகுமரி, கோவளம் கடற்கரைச் சாலையில் கடந்த 1971-ம்ஆண்டு திறக்கப்பட்ட கலங்கரைவிளக்கம் தரைமட்டத்தில் இருந்து 130 மீட்டர் உயரத்திலும், கடல்மட்டத்தில் இருந்து சுமார் 30 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கலங்கரைவிளக்கத்தை சுற்றுலாபயணிகள் சுற்றிபார்க்கும் வகையில் கலங்கரைவிளக்கத்தின் உட்பகுதி வழியாக
மேல்த்தளத்திற்கு செல்லும் வகையில் சுமார் 136 படிகட்டுகள்
அமைக்கப்பட்டுள்ளது.
மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு பின்னர் கலங்கரைவிளக்கத்தின் மேல்பகுதியில் கடலில்செல்லும் கப்பல்களை கண்காணிக்கும் வகையில் கடந்த 2012-ம்ஆண்டு 2 கோடியே 25 லட்சம்ரூபாய் மதிப்பீட்டில் அதி நவீன ரேடார் கருவிபொருத்தப்பட்டது.இதனால் சுற்றுலாபயணிகள் கலங்கரைவிளக்கத்தின் மேல்பகுதிக்குசெல்ல கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது.
இந்நிலையில் படிகட்டில் நடந்து செல்லாமல் கலங்கரைவிளக்கத்தின் மேல்பகுதிக்கு சுற்றுலாபயணிகள் எளிதாக சென்று சுற்றிபார்க்கும் வகையில் கலங்கரை விளக்கத்தின் பின்பக்கமாக லிப்ட்அமைக்க மத்திய அரசு அனுமதியளித்து அதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது. இதனையடுத்து கலங்கரை விளக்கத்தை சுற்றிலும் இரும்புகம்பிகளால் சாரம் அமைக்கும் பணி தற்போது தீவிரமாக நடந்துவருகிறது. இந்த முதல்கட்ட பணிகள் நிறைவடைந்ததும் லிப்ட் அமைக்கும் பணி தொடங்கும்.