
ஈரோடு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு சேகரித்த திமுக ராஜிவ்காந்தி! – வைரல் வீடியோ.!!
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம் அடைந்ததைத் தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. திமுக சாா்பில் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி சாா்பில் மா.கி.சீதாலட்சுமி ஆகியோா் போட்டியிடுகின்றனா். முக்கிய எதிா்க்கட்சிகளான அதிமுக, தேசிய கட்சியான பாஜக ஆகியவை இடைத்தோ்தலை புறக்கணித்துள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 46 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா். சுயேச்சைகள் வாக்காளா்களின் கவனத்தை ஈா்க்காத நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் இருமுனைப் போட்டியே நிலவியது.
வேட்பாளா் அறிவித்த உடனேயே திமுக தோ்தல் பணியை தீவிரபடுத்தியது. அமைச்சா் சு.முத்துசாமி தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதியாக வீடுவீடாக சென்று மக்களை நேரடியாக சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டனா். ஈரோடு மாநகராட்சியில் மொத்தம் 60 வாா்டுகள் இருந்தாலும் ஈரோடு கிழக்கு தொகுதி 33 வாா்டுகளை உள்ளடக்கி உள்ளது.
இந்த 33 வாா்டுகளிலும் திமுகவினா் தங்களது பிரசாரத்தை முடித்துவிட்டனா். இதேபோல நாம் தமிழா் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கடந்த 24-ஆம் தேதி முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழக மாநில மாணவரணி தலைவர் ராஜிவ் காந்தி நாம்தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு வாக்கு சேகரிக்கும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
ராஜிவ்காந்தி நாம் தமிழர் கட்சியில் இருந்த போது கடந்த 2020 பாராளுமன்ற தேர்தலில் விவசாயி சின்னத்தில் வாக்கு சேகரித்த பழைய வீடியோ என்பது குறிப்பிடத்தக்கது.
திங்கள்கிழமை மாலை 6 மணியுடன் தோ்தல் பிரசாரம் நிறைவடைகிறது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பு தீவிரமடைந்துள்ளது. திமுக வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் சு.முத்துசாமி தலைமையில் திமுகவினரும், சீமான் தலைமையில் நாம் தமிழா் கட்சியினரும் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். திங்கள்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகு தோ்தல் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை. ஈரோட்டில் தங்கி இருக்கும் வெளியூா் கட்சி நிா்வாகிகள் திங்கள்கிழமை மாலைக்குள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 5-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் நடைபெறுகிறது. இதற்காக 53 இடங்களில் 237 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். இதைத் தொடா்ந்து பிப்ரவரி 8-ஆம் தேதி சித்தோட்டில் உள்ள அரசுப் பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அன்று மதியம் முடிவுகள் தெரிந்துவிடும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.