மே 10 முதல் 2 வாரங்களுக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு – எவை எல்லாம் செயல்பட அனுமதி? முழு விவரம்!

தமிழகத்தில் மே 10-ந் தேதி முதல் 2 வாரங்களுக்கு முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது. இதனையடுத்து இன்றும் நாளையும் இரவு 9 மணிவரை கடைகள் முழுமையாக செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும் முழு ஊரடங்கின் போது கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும். – அத்தியாவசியப் பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம், தனியார் விரைவுத் தபால் சேவை, மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனைக் கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள் போக்குவரத்து, விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், ஆக்சிஜன் வாயு எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது அனுமதிக்கப்படும். – வேளாண் உற்பத்திக்கு தேவையான பூச்சிக்கொல்லி, உரம், விதை விற்பனை செய்யும் கடைகள், மாட்டுத்தீவனம் விற்பனை செய்யும் கடைகள், காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும். – முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், உணவகங்களில் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. – மின் வணிகம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. – – சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. – அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும். – காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை அனுமதிக்கப்படும். – நியாய விலைக் கடைகள் காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை செயல்படும். – தன்னார்வலர்கள் வயது முதிர்ந்தோர், மாற்றுத் திறனாளிகள், நோயுற்றவர்களுக்கான சேவை வழங்குபவர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை / ஆவணங்களுடன் சென்று வர அனுமதிக்கப்படுகிறது. – நீதித்துறை மற்றும் நீதிமன்றங்கள். நடைபெற்றுவரும் கட்டடப் பணிகள் அனுமதிக்கப்படும். – ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் தொடர்ந்து பணியாற்றலாம். – தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மட்டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த தொழிற்சாலைகளில் பணியாற்றும் ஊழியர்கள் / அலுவலர்கள் இந்நிறுவனங்கள் ஏற்பாடு செய்யும் பேருந்துகளிலோ அல்லது சொந்த வாகனங்களிலோ இந்நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டையுடன் செல்ல அனுமதிக்கப்படுகிறது. – திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகள் (கலந்துகொள்வோர் எண்ணிக்கை 50 நபர்களுக்கு மிகாமல்) மற்றும் இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு (கலந்து கொள்வோர் எண்ணிக்கை 20 நபர்களுக்கு மிகாமல்) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கும் அதில் கலந்துகொள்வதற்கும் எந்தவிதமான தடையுமில்லை. – தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள் அனுமதிக்கப்படும். – தரவு மையங்களில் பராமரிப்பு பணி, மருத்துவம், நிதி, வங்கி, போக்குவரத்து மற்றும் இதர அத்தியாவசிய பணிகளுக்கு தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பு சார்ந்த பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். – கிடங்குகளில், சரக்குகளை ஏற்றுவது, இறக்குவது மற்றும் சரக்குகளை சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும். – முழு ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்களில், தீ, இயந்திரம் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும். -முழு ஊரடங்கின் போது, இரயில் நிலையங்களிலும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும். – பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். – வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவன சேவைகள் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் அனுமதிக்கப்படும். – இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் அக்கடைகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். – முழு ஊரடங்கு 10.05.2021 முதல் அமல்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு, பொது மக்களும், நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக 08.05.2021 (சனிக்கிழமை) மற்றும் 09.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களிலும் அனைத்து கடைகளும், நிறுவனங்களும் வழக்கம் போல காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. – – கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது மற்றும் கூட்டங்களை தவிர்ப்பது உள்ளிட்டவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெற வேண்டும். – இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

error: Content is protected !!