
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா ஆரம்பம்!
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நேற்று 21-ந்தேதி காப்பு கட்டுதலுடன் வைகாசி விசாக திருவிழாகோலகாலமாக தொடங்கியது. மே 30-ந் தேதி சண்முகப்பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடங்கள் காவடிகள் சுமந்து வந்து தங்களது நேர்த்தியை செலுத்துகிறார்கள்.
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் 12 மாதமும் திருவிழா வெகு விமர்ச்சியாககொண்டாடப்பட்டு வருகிறது. அதில் வைகாசி மாதத்தில் வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் கொண்டாடப்படுவது சிறப்பு. இந்த ஆண்டிற்கான வைகாசி விசாக திருவிழா 21-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவின் முதல் நாளான நேற்று 21-ந் தேதி மாலை 6 மணியளவில் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசுவாமி தெய்வானை அம்பாளுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. இதனை தொடர்ந்து சண்முகர் சன்னதியில் தெய்வானை அம்பாள், வள்ளி அம்பாளுடன் சண்முகருக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது. இதனையடுத்து சுப்பிரமணியசுவாமி தெய்வானை அம்பாளுடன் சிம்மாசனத்தில் அமர்ந்து மேளதாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து சகல பரிவாரங்களோடு புறப்பட்டு கோவிலுக்குள் லட்சுமி தீர்த்தம் எனும் திருக்குளம் அருகே உள்ள கூத்தியார்குண்டு சோமசுந்தரம் பிள்ளை வகையறா மண்டபத்திற்கு எதிரே அமைந்துள்ள வசந்த மண்டபத்தை 3 முறை வலம் வந்தார். மேலும் வசந்த மண்டபத்தில் அமைக்கக்கூடிய ஊஞ்சலில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் அங்கு இருந்து புறப்பட்டு உற்சவர் சன்னதிக்கு திரும்பினார். இதே போல வருகின்ற 30-ந் தேதி வரை தினமும் மாலை 6 மணிக்கு உற்சவர் சன்னதியில் இருந்து புறப்பட்டு கோவிலுக்குள் லட்சுமி தீர்த்தம் எனும் திருக்குளம் அருகே உள்ள கூத்தியார்குண்டு சோமசுந்தரம் பிள்ளை வகையறா மண்டபத்திற்கு எதிரே அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் சுவாமி அம்பாளுடன் எழுத்தருளி ஊஞ்சலாடும் நிகழ்ச்சி நடக்கிறது.
குடம், குடமாக பாலாபிஷேகம்
திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகின்ற 30 – ந் தேதி விசாக திருவிழா விசேஷமாக நடக்கிறது. விழாவையொட்டி அன்று மதுரை மற்றும் மதுரையை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் கூட்டம் கூட்டமாக பாதயாத்திரை வந்து கோவிலில் குவிந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இது தவிர ஏராளமான பக்தர்கள் பால் குடங்கள், காவடிகள் சுமந்து வந்து தங்களது நேர்த்தியை செலுத்துகிறார்கள். விசாக திருவிழாவின் விசேஷமாக சண்முகபெருமான் வள்ளி மற்றும் தெய்வானை அம்பாளுடன் தன் இருப்பிடமான சண்முகர் சன்னதியில் இருந்து இடம் பெயர்ந்து கோவிலுக்குள் கம்பத்தடி மண்டப வளாகத்தில் உள்ள விசாக குடிலில் எழுந்தருளுவார். இத்தகைய நிகழ்வு நடைபெறுவது ஆண்டுக்கு ஒரு முறை என்பது தனி சிறப்பு.
விசாக குடிலில் பத்தர்கள் தங்களது நேர்த்திகக்கடனை செலுத்த கொண்டுவரும் பால் வள்ளி தெய்வானை சமேத சண்முகப்பெருமானுக்கு குடம், குடமாக பாலாபிஷேகம் நடைபெறும். அவை கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். திருப்பரங்குன்றம் முருகன் கோவிலைப் பொறுத்தவரை மலையை குடைந்து கோவிலின் கருவறை அமைய பெற்றுள்ளதால் முருகப் பெருமானின் திருமேனில் அபிஷேகம் கிடையாது. மாறாக முருகப்பெருமானின் திருக்கரத்தில் உள்ள வேலுக்கு மட்டுமே அனைத்து அபிஷேகங்களும் நடைபெற்று வருகிறது. ஆகவே இங்கு “வேல்” மகிமை பெறுகிறது இதே சமயம் ஆண்டுக்கு ஒரு முறை விசாக திருவிழா நாளில் சண்முகப் பெருமானுக்கு அதிகாலை 4.30 மணி முதல் மதியம் 2 30மணி வரை இடைவிடாது சுமார் 10 மணி நேரத்திற்கு மேல் குடம் குடமாக பாலாபிஷேகம் நடைபெறுவது தான் விசாகத் திருவிழாவின் தனி சிறப்பு.
அதிகாலை 4.30 மணிக்கு நடைதிறப்பு
கோவிலில் தினமும் காலை 5.30 மணி திறக்கப்பட்டு வருகிறது. ஆனால் விசாக திருவிழாவையொட்டி வழக்கத்திற்காக மாறாக 1 மணி நேரத்திற்கு முன்னதாக திறக்கப்படுகிறது. அதாவது வருகின்ற 30-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.