
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதினம் சாமி தரிசனம்!
திருப்பரங்கிரி, சுவாமிநாதபுரம், சத்தியகிரி, சமந்தவனம் இவையெல்லாம் என்ன என்கிறீர்களா? முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தின் வேறு பெயர்கள்தான். ஆதிசங்கரர் கூறிய ஷன் மதங்களான சைவம், வைணவம், சாக்தம், கவுமாரம், கானாபத்யம், சவுரம் எனும் ஐந்து மதங்களின் தெய்வங்களை ஒரே இடத்தில் நின்று தரிசிக்கும் அமைப்பும், அம்சமும், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலைத் தவிர வேறு எங்குமில்லை.
ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். தமிழகம் மட்டுமல்லாது, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
குறிப்பாக வெளிநாட்டு பக்தர்கள் கோவில் வழிமுறைப்படி சாமிதரிசனம் செய்துவிட்டு அங்குள்ள கட்டிடக்கலையையும் கண்டு ரசிக்கின்றனர். ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜப்பானிய சிவ ஆதீனம் பாலகும்ப குரு முனி இன்று காலை 10 மணி அளவில் தனது சீடர்களுடன் காவி உடை அணிந்து நெற்றியில் பட்டை, கழுத்தில் ருத்ராட்ச மாலை, கையில் யோக தண்டத்துடனும் கோயிடலுக்குள் சென்று சிவபெருமான் சத்தியகிரீஸ்வரர், மூலவர் சுப்பிரமணியர், பவளக்கனிவாய்ப் பெருமாள், கற்பக விநாயகர், துர்கையம்மன் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்தனர். சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழகக் கோவில்களில் ஜப்பான் ஆதீனத்தின் தரிசனம் ஜப்பான் சிவ ஆதீனத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட ஜப்பானியப் பக்தர்கள், காவி உடை அணிந்து தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து ஆன்மீகப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் ஏற்கனவே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில், வைத்தீஸ்வரன் கோவில், மற்றும் தஞ்சாவூர் பெரிய கோவில் ஆகிய இடங்களுக்கு வந்து தமிழ் மொழியில் பக்தி கோஷங்களை முழங்கி, உலக நன்மைக்காகச் சிறப்பு யாகங்கள் மற்றும் தரிசனங்களைச் செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.