
சல்லியர்கள் திரைப்படம்-புறக்கணிப்பு.. தமிழீழ அரசியல் துறை கண்டனம்!
கிட்டு இயக்கத்தில் ஈழத்து மண்ணில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் சல்லியர்கள். கருணாஸ் நடித்துள்ள இப்படம் ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆக இருந்தது. ஆனால் போதுமான திரையரங்குகள் ஒதுக்கப்படாத காரணத்தால் இப்படத்தின் வெளியீடு தடைபட்டது. இப்படத்திற்கு வெறும் 27 தியேட்டர்களே ஒதுக்கீடு செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இன்று இப்படத்தை நேரடியாக ஓடிடியில் வெளியிடுவதாக அறிவித்திருந்தார்.

இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது : “எமது வி ஹவுஸ் புரொடக்ஷன் வெளியீடாக சல்லியர்கள் என்ற படத்தை ஜனவரி 1 அன்று வெளியிட இருந்தோம். ஆனால், வெறுமனே 27 திரையரங்குகள் மட்டுமே கிடைக்கின்றன. இன்று சிறிய படங்களின் நிலை இப்படித்தான் இருக்கிறது. தமிழ் மக்கள் சார்ந்து ஈழப் போராட்டம் சார்ந்து எடுத்துள்ள எம் மக்களுக்கான படத்தை இங்கே வெளியிட இவ்வளவு போராட்டம். குறிப்பாக பிவிஆர் திரையரங்கம் ஒரு திரையரங்கு கூடத் தரவில்லை.
எங்கிருந்தோ வந்து எம் மக்கள் பணத்தை சுரண்டிக் கொழுத்துவிட்டு எம்மையே புறக்கணிக்கும் செயலைச் செய்ய முடிவதெப்படி? பெரிய படங்களுக்கு கொடுக்கும் மரியாதையை சிறிய படங்களுக்கு தராததும் ஒரு நவீன தீண்டாமைதான். இன்று சுரேஷ் காமாட்சிக்கு நடந்தது நாளைக்கு இன்னொரு தயாரிப்பாளருக்கு நடக்கலாம். சல்லியர்கள் படம் OTT PLUS என்கிற தளத்தில் வெளியாகி உள்ளது. உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் இப்படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள்” என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


சல்லியர்கள் படத்திற்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் குறிப்பாக தமிழ்த் தேசிய அரசியல் தலைவர்கள் சீமான் உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இப்படம் குறித்து இயக்குநர் சேரன் போட்டுள்ள பதிவில், “OTT Plus என்ற தளத்தில் “சல்லியர்கள்”.. தம்பி கிட்டு இயக்கத்தில் ஈழத்து மண்ணில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவிய படைப்பு. திரையரங்கங்கள் சரியாக கிடைக்காததால் ஓடிடியில் நேரடியாக வெளியிட்டிருக்கிறார்கள். இதற்கு நாம் தரும் ஆதரவே இன்னும் நல்ல படங்கள் உருவாக வழிவகுக்கும்” என பதிவிட்டுள்ளார். இப்படம் ஏராளமானோர் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருவதால், #சல்லியர்கள் என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

மேலும்
“தமிழ்நாட்டில் தமிழ்த் தேசியத்தைப் புறக்கணிக்கிறதா
தென்னிந்தியத் திரை உலகம்’ என தமிழீழ அரசியல்துறையின் தமிழீழத் தேசியப்படைப்புக்களுக்கான தணிக்கைக் குழுமம், கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதில் கடந்த பலநூற்றாண்டுகளாக தமிழர் வரலாற்றினைச் சிதைப்பதற்கு வடமாநிலத்தவர்களின் தலையீடுகளால் பல வகைப்பட்ட வரலாற்று அழிப்பு நடவடிக்கைகள் தொலைநோக்குத் திட்டமாக தமிழக மண்ணில் அரங்கேற்றப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நவீன தொழில்நுட்ப வசதிகளோடு கூடிய திரைப்படங்கள் வாயிலாகவும் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்று நியாயாதிக்கத்தை உலகிற்கு வெளியிடாத வண்ணம் மறைமுகமாக தடை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழர்களின் எழுச்சிமிகு விடுதலைப்போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் குறிப்பாக பேமிலி மேன் (Family man),
என்ற வலைத்தொடர். மெட்ராஸ் கபே. (Madras cafe) முதல். ஒற்றைப்பனைமரம் மற்றும் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஜாட்(JATT) போன்ற திரைப்படம் வரை. திரைப்படங்களை தயாரித்து. திரையரங்குகளில் வெளியிட தமிழரல்லாதவர்களும், வடமாநிலத்தவர்களும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டுத் தேசியவாதிகளின் உணர்வுகளால் உந்தப்பட்டு பல இளம் இயக்குனர்கள் தமிழ்த் தேசியக் கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் உருவாக்கும் திரைப்படங்களுக்கு இந்தியத் திரைப்படத் தணிக்கைக்குழுமம் சரியான அனுமதி கொடுக்காமல் பல தடைகளை விதிப்பது யாவரும் அறிந்ததே. இந்தியத் திரைப்பட தணிக்கைக்குழுமம் அனுமதி வழங்கிய (V House) வெளியீட்டில் இயக்குனர் திரு.தி.கிட்டு அவர்களின் இயக்கத்தில் உருவாகிய திரைப்படமான சல்லியர்கள் திரைப்படத்தை, திரையரங்குகளில் வெளியிட நீண்டகாலம் இழுத்தடித்து. தமிழ்நாட்டில் அண்ணளவாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகள் இருக்கும் போது, இத்திரைப்பட வெளியீட்டாளரால், கோரப்பட்ட திரையரங்குகளை விட மிகக் குறைவான திரையரங்குகளை(27) மட்டுமே ஒதுக்கி. இத்திரைப்படத்தினை மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தாவண்ணம் திட்டமிட்டு மறைமுகமாகத் தடுத்ததில் (PVR)சினிமாவிற்கு முக்கிய பங்கு உள்ளதென அறிய முடிகிறது.
மேலும் சர்வதேச விதிகளுக்கு அமைவாக எடுக்கப்பட்ட ஒரு இனத்தின் கருத்தியல் உரிமையை வெளியிட மறுக்கப்பட்டதாகவே கருதுகின்றோம். சல்லியர்கள் திரைப்படமானது தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றும் மருத்துவப் போராளிகளின். தியாகத்தையும், மக்களின் தியாகத்தினையும், சித்தரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள சம்பவங்கள் கற்பனையல்ல உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டது. மருத்துவ போராளிகள் தம் உயிரையும் துச்சமென மதித்து செயல்படுபவர்கள். சர்வதேச போர்விதிகளுக்கமைவாக எதிரிப்படை வீரனையும் மனிதாபிமானமாக நடாத்தும் தன்மை கொண்டவர்கள் – இதனை கருத்தில் கொண்டு இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டதால். விடுதலைப் போராளிகளினதும். தமிழீழமக்களினதும் விடுதலைக்கான அறம்சார்ந்த அர்ப்பணிப்புக்களை உலக மக்களுக்குச் சென்றடையா வண்ணம் தடுத்து. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் நியாயத்தையும். தியாகத்தையும் வெளிக்காட்டுவதை தென்னிந்திய திரையுலகில் உள்ள தமிழின விரோதிகள் முனைவதாகவே நாம் கருதுகின்றோம்.
இவ்வாறான தொடர் பாதகச் செயற்பாடுகளை தடுப்பதற்கு தமிழக தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டுமென உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். இத்திரைப்படம் வெளியிடும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தமிழர்களின் மனங்களில் தென்னிந்திய திரை உலகின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான தமிழ்த் தேசிய விரோத நடவடிக்கையில் ஈடுபடும் திரையுலகில் மறைந்துள்ள நாசகார சக்திகளை, தமிழீழ அரசியல்துறையின் தமிழீழத் தேசியப்படைப்புக்களுக்கான தணிக்கைக் குழுமமாகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகள் தொடருமிடத்தில், உங்களின் ஆதரவோடு வெளியிடப்படும் திரைப்படங்களை இனம் கண்டு புலம்பெயர் தேசத்துமக்களால் புறக்கணிக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என அறிக்கை வெளியீட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.