மாணவி மரணம்: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி 3-வது தளத்தை திறக்க ஐகோர்ட் அனுமதி

சென்னை: புலன் விசாரணைக்காக சீல் வைக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியின் மூன்றாவது தளத்தை திறக்க அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த 12-ம் வகுப்பு மாணவி, கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் மரணமடைந்தார். இதையடுத்து பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி மூடப்பட்டது.

இந்த நிலையில், பள்ளியை மீண்டும் திறக்க அனுமதிக்கக் கோரி பள்ளி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஏற்கெனவே சீல் வைக்கப்பட்டிருந்த பள்ளி வளாகத்தில் புலன் விசாரணைக்காக ‘ஏ’ பிளாக் கட்டிடத்தின் மூன்றாவது தளம் மற்றும் மாடிப் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளை பயன்படுத்திக்கொள்ள பள்ளி நிர்வாகத்துக்கு அனுமதியளித்து இருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளி நிர்வாகம் தரப்பில், “வழக்கின் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் சீல் வைக்கப்பட்டுள்ள ‘ஏ’ பிளாக்கில் உள்ள மூன்றாவது தளம் மற்றும் மாடியை திறக்க அனுமதியளிக்க வேண்டும்” எனக் கோரினார்.

பள்ளிக் கல்வித்துறை சார்பில்,“உரிய அனுமதி பெறாமல் மூன்றாவது தளம் கட்டப்பட்டுள்ளதால் அதை திறக்க அனுமதிக்கக்கூடாது” என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அதையேற்க மறுத்த நீதிபதி, “அந்தத் தளம் உரிய அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்தால் அதற்காக நோட்டீஸ் அனுப்பி தனியாக நடவடிக்கை எடுக்கலாம்” எனக்கூறி மூன்றாவது தளம் மற்றும் மாடியை திறந்து பயன்படுத்திக் கொள்ள பள்ளி நிர்வாகத்துக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!