சபரிமலையில் மண்டல பூஜை.. தங்க அங்கியில் ஐயப்பன்!

சபரிமலையில் மண்டல பூஜை.. தங்க அங்கி அலங்காரத்தில் ஐயப்பன்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் மிக முக்கியமான பூஜைகளில் ஒன்று மண்டல பூஜை. சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த 41 நாட்கள் மண்டல காலத்தின் போது மட்டுமே நீண்ட நாட்கள் திறந்திருக்கும். லட்சக்கணக்கான பக்தர்கள் மண்டல காலத்தில் மாலை அணிந்து, கடுமையாக விரதம் இருந்து சபரிமலை வந்து, சாமி ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கும் ஒரு புனிதத் தலமாகும். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது மண்டல பூஜை ஆகும்.

மண்டல பூஜையானது மலையாள மாதமான ‘விருச்சிகம்’ (கார்த்திகை முதல் தேதி) முதல் தேதியில் தொடங்கி, 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் வழிபாட்டு காலமே மண்டல காலம் எனப்படுகிறது. இந்த 41 நாட்களின் நிறைவு நாளில் ஐயப்பனுக்கு நடைபெறும் சிறப்பு பூஜையே ‘மண்டல பூஜை’ ஆகும். இது பொதுவாக டிசம்பர் மாதம் 26 அல்லது 27-ம் தேதிகளில் நடைபெறும். இந்த ஆண்டு டிசம்பர் 27ம் தேதியான நாளை சபரிமலையில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை நடைபெற உள்ளது.

மண்டல பூஜையின் உண்மையான பலனைப் பெற ஒரு பக்தர் 41 நாட்கள் கடுமையான விரதத்தை மேற்கொள்ள வேண்டும். விரதத்தைத் தொடங்கும் பக்தர்கள் துளசி அல்லது உருத்திராட்ச மாலையை அணிந்து ‘சுவாமி’யாக மாறுகிறார்கள். மது, புகை, அசைவ உணவுகளைத் தவிர்த்தல், பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்தல் மற்றும் தரையில் உறங்குதல் போன்றவை கட்டாயமாகும். கறுப்பு, நீலம் அல்லது காவி நிற ஆடைகளை அணிவதன் மூலம், உலகியல் சுகங்களைத் துறந்து அனைவரும் சமம் என்ற மனநிலையை பக்தர்கள் பெறுகிறார்கள். பக்தர்கள் தங்களின் பாவ-புண்ணியங்களை மூட்டையாகக் கட்டி, நெய் தேங்காயுடன் தலைப்பொதியாகச் சுமந்து வருவது ‘இருமுடிக்கட்டு’ எனப்படும். இது “நான்” என்ற அகந்தையை விட்டு இறைவனிடம் சரணடைவதைக் குறிக்கிறது.

தங்க அங்கி (Thanka Anki) ஊர்வலம்: மண்டல பூஜைக்கு சில நாட்களுக்கு முன்பு, திருவிதாங்கூர் மன்னரால் வழங்கப்பட்ட 450 பவுன் எடையுள்ள தங்க அங்கி ஆரண்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்படும். மண்டல பூஜை அன்று இந்த தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்படும்.பக்தர்கள் கொண்டு வரும் பசு நெய்யால் ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. நெய் என்பது ஆத்மாவையும், தேங்காய் என்பது உடலையும் குறிப்பதாக ஐதீகம். மண்டல பூஜை அன்று வேத மந்திரங்கள் முழங்க சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்படும். பிறகு பதினெட்டு படிகளுக்கும் பூஜைகள் நடைபெறும்.

இந்த ஆண்டு தங்க அங்கி ஊர்வலம் டிசம்பர் 23ம் தேதி துவங்கியது. நேற்று டிச.26ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு தங்க அங்கி சன்னிதானம் வந்தடைந்தது.. இதனை தொடர்ந்து தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவித்து தீபாராதனை நடைபெற்றது. டிச. 27 இன்று மண்டல பூஜை, வழிபாடு நடைபெறும். தங்க அங்கி அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்குக் காட்சியளிப்பார். அன்றைய தினம் இரவு 11 மணியளவில் கோயில் நடை அடைக்கப்படும். அத்துடன் மண்டல பூஜை நிறைவடைகிறது. பின்னர் மகரவிளக்கு பூஜைக்காக டிச. 30ம் தேதி காலை மீண்டும் நடை திறக்கப்பட்டு, ஜனவரி 14 வரை மகரவிளக்கு பூஜைகள் நடைபெறும்.

மகர சங்கராந்தி தினமான ஜனவரி 15ம் தேதியன்று பந்தள அரண்மனையில் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரணங்கள் சுவாமி ஐயப்பனுக்கு அறிவிக்கப்பட்டு, பூஜைகளை நடைபெற்ற பிறகு மாலை 6 மணிக்கு பிறகு மகரஜோதி தரிசனம் நடைபெறும். அதற்கு பிறகு ஜனவரி 19ம் தேதி இரவு வரை சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஜனவரி 19ம் தேதியன்று மாலையுடன் பக்தர்கள் மலையேறுவது நிறுத்தப்படும். ஜனவரி 20ம் தேதியன்று காலை 7 மணியளவில் பந்தள அரண்மனை பிரதிநிதிகள் முன்னிலையில் சபரிமலை நடை அடைக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!