தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் கிடாய்முட்டு சண்டையும் ஒன்றாகும். இதற்காக மதுரை, சிவகங்கை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஆங்கிலேயர் காலம் தொட்டு பரம்பரை, பரம்பரையாக தற்போது வரை கிடாய் வளர்த்து வருகின்றனர். இதில் மூலி, இரிசல், கோங்கு, குரும்பை, கச்சைகட்டி கருங்குட்டி, வேங்கால் என பல்வேறு வகை இனங்கள் உண்டு.
இதில் வயதிற்கு ஏற்றார் போல் கிடாய்களை மோத விடுகின்றனர். முன்பு விழாக்களில் பிரதானமாக நடந்த கிடாய்முட்டு சண்டை தமிழக அரசு விதித்த தடைக்கு பிறகு குறைந்து வருகிறது.
இதனால் தமிழர்களின் பாரம்பரியமான கிடாய் முட்டு வீர விளையாட்டு அழிந்து விடகூடாது என கிடாய்முட்டு ஆர்வலர்கள் மறைமுகமாக ஆங்காங்கே நடத்தி வருகின்றனர். இதில் போட்டி நடத்துபவர்களையும், கிடாய் உரிமையாளர்களையும் போலீசார் அவ்வப்போது கைதுசெய்வது தொடர் கதையாக உள்ளது.
இருப்பினும் வாடிப்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர் பகுதிகளில் ஆர்வம் குறையாமல் கிடாய்களுக்கு சத்தான உணவுகள் வழங்கி நீச்சல், நடை பயிற்சி, கிடாய்களை மோத விடுவது என தொடர்ந்து அதிகளவில் கிடாய்களுக்கு பயிற்சியளித்து வருகின்றனர்.
மேலும் இந்த பாரம்பரிய வீர விளையாட்டு மற்றும்
கிடாய்களின் இனங்கள் அழியாமலும், இருக்க மீண்டும் தமிழக அரசு கிடாய்முட்டு சண்டையை முறையாக நடத்த அனுமதி வழங்க வேண்டும் என கிடாய் வளர்ப்போர் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழக அரசு அனுமதி வழங்க கோரி விரைவில் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க உள்ளதாகவும், அனுமதியளிக்காத பட்சத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் போராடி பெறுவோம் என்றும் தெரிவித்தனர்.