ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய வேதாந்தா நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க ஐவர் குழுவை உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. NEERI -யால் பரிந்துரைக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 3 நிபுணர்கள் கண்காணிப்பு குழுவில் இடம்பெறவேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து தூத்துக்குடி அருகேயுள்ள பண்டாரம்பட்டியில் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதன் மூலம் அந்த நிறுவனத்திற்கு உயிரூட்டும் முயற்சி நடைபெறுகிறது. எனவே அதை முற்றிலுமாக நிராகரித்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என வலியுறுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுபோல் தூத்துக்குடி புதுத்தெரு பகுதியிலும் மக்கள் போராட்டம் தொடங்கியுள்ளனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மீண்டும் போராட்டம் துவங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.