வெற்றிக்கு வில்லங்கம்? திருப்பரங்குன்றத்தில் வாக்குகளைப் பிரிக்கும் சசிகலா வேட்பாளர்!

வெற்றிக்கு வில்லங்கம்? திருப்பரங்குன்றத்தில் வாக்குகளைப் பிரிக்கும் அ.இ.பு.ம.மு.க வேட்பாளர் தனபாண்டியன்!

அதிமுகவால் ஓரங்கட்டப்பட்ட சசிகலாவும் தற்போது அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ள அன்புமணியால் ஓரங்கட்டப்பட்ட ராமதாஸும் கூட்டணி வைத்துள்ளதன் மூலமாக, வரும் பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் பிரியும் என்றே கூறப்படுகிறது.

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அவரது நெருங்கிய தோழி வி.கே. சசிகலா, கடந்த பிப். 24 அன்று ‘அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். தொடர்ந்து, வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக நிறுவனர் ராமதாஸுடன் கூட்டணியை இறுதி செய்தார்.

ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பாமக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. கட்சி அன்புமணி வசம் சென்ற நிலையில், அன்புமணியின் துரோகத்தால் ராமதாஸும் ஆதங்கத்தில் உள்ளார்.

அதிமுகவால் துரோகம் இழைக்கப்பட்ட சசிகலாவும் அன்புமணியால் துரோகம் இழைக்கப்பட்ட ராமதாஸும் கூட்டணியாக வரும் தேர்தலில் களமிறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் திமுக கூட்டணி, அதிமுக – பாஜக கூட்டணி, தவெக, நாதக ஆகிய 4 முனைப் போட்டியே முக்கியமானதாகப் பார்க்கப்படும் நிலையில் சசிகலா – ராமதாஸ் கூட்டணி என்ன தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என நினைக்கலாம்.

அன்புமணி, அதிமுக கூட்டணியில் உள்ளதால் அன்புமணிக்கு எதிரான ராமதாஸின் பிரசாரம், அதிமுக வாக்குகளையேச் சிதைக்கும் என்று கருதப்படுகிறது.

தமிழகத்தில் பலமுனைப் போட்டி நிலவி வருவதால் 1,000 வாக்குகள் பிரிந்தால்கூட அது பல தொகுதிகளில் தேர்தல் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்றே சொல்லப்படுகிறது.

கடந்த 2021 தேர்தலில் 25 தொகுதிகளின் வெற்றிக்க்கான வாக்குகளின் வித்தியாசம் 3,000 -க்கும் குறைவே என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் வடக்கு, டெல்டா, தென் மாவட்டங்களில் சசிகலா – ராமதாஸ் இருவரும் இணைந்து அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நிச்சயம் ஒரு பின்னடைவை ஏற்படுத்துபவர்களாக அமைவார்கள் என்றே அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

இதுதவிர புதிய தமிழகம் கட்சியின் கே. கிருஷ்ணசாமி, மேற்கு மற்றும் தென் மாவட்டங்களில் சுமார் 61 தொகுதிகளில் வேட்பாளர்களைக் களமிறங்கியுள்ள நிலையில், அவரும் அதிமுகவுக்கு, குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே பிரசாரம் செய்து வருகிறார். 2 முறை பேச்சுவார்த்தை நடத்தியும் தனது புதிய தமிழகம் கட்சியை, அதிமுக கூட்டணியில் சேர்க்காத விரக்தியில் கிருஷ்ணசாமி உள்ளார். ஜெயலலிதாவை ஒப்பிட்டு எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார் கிருஷ்ணசாமி.

அதிமுகவில் 3 முறை முதல்வராக இருந்த, ஜெயலலிதாவின் விசுவாசியான ஓ. பன்னீர்செல்வம் தற்போது திமுகவில் இணைந்த நிலையில், அவரும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகவே பிரசாரம் செய்து வருகிறார்.

அதேபோல திமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகனும், பல்வேறு தொகுதிகளில் தனது வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளார்.

இந்நிலையில் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் கிருத்திகா தங்க பாண்டியனும், அதிமுக சார்பில் ராஜன் செல்லப்பாவும், நாம் தமிழர் கட்சியின் சார்பாக சத்யா தேவியும், தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக நிர்மல் குமார் என நான்கு முனை போட்டி நிலவி வருகையில், அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தனபாண்டியன் என ஐந்தாவது முனை போட்டி என்ற நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதி முழுவதும் தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறார். இவர் ஏற்கனவே திருப்பரங்குன்றம் தொகுதியில் மூன்று முறை தேமுதிக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகள் மூலம் வேட்பாளராக நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.  அனைத்திந்திய கட்சி புரட்சிதலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் தன பாண்டியன் தென்னந்தோப்பு சின்னத்திற்கு செய்து வரும் பிரச்சாரம், வரும் தேர்தலில் குறிப்பாக அதிமுகவினரின் வாக்குவீதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!