இதுதான் வைகை ஆறு.! “அழகரை ஏமாற்றிய அறநிலையத்துறை”

மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு , கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி கோயில் வளாகத்திலேயே நடைபெற்றது.
உலக பிரசித்தி பெற்ற மதுரை கள்ளழகர் கோயிலில் கடந்த 23ம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 14 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தநிலையில் கொரோனா பரவல் காரணமாக வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறாது எனவும் அதற்கு பதில் கோயில் வளாகத்திலேயே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபோகம் ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டாவது கள்ளழகர் ஆற்றில் இறங்குவதை கண்டு ரசித்துவிடமாட்டோமா  என எண்ணற்ற பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்த  நிலையில், இந்த ஆண்டும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.
இந்நிலையில், சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை 8:30 மணி அளவில் தொடங்கியது.
இதற்காக கோயில் வளாகத்தில், வைகை ஆற்றுப் பாலம் போன்ற ஓவியங்கள்,பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன. மேலும், தரையில் பாலித்தீன் விரிப்புகள் விரித்து அதில் தண்ணீரை நிரப்பி ஆறு போன்றும் வடிவமைக்கப்பட்டிருந்தது. பின்னர் 9:30 மணி அளவில் பச்சை பட்டாடை உடுத்தி தங்க குதிரையில் வலம் வந்த கள்ளழகர், அங்கு செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த மாதிரி வைகை ஆற்றில் இறங்கினார்.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண அனுமதி மறுக்கப்பட்டதால் பக்தர்கள்  கோயில் வாயிலில் இருந்தே சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வு ரத்து செய்யப்பட்டு செயற்கையாக வைகை ஆறுபோல் காட்சியமைக்கப்பட்டு பக்தர்களை மட்டுமில்லாமல் அழகரையும் அறநிலையத்துறையினர் ஏமாற்றம் செய்து விட்டதாக பக்தர்கள் குற்றம்சாட்டுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

error: Content is protected !!