சபரிமலையில் புதிய விமான நிலையம்!

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் விரதம் இருந்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்து கொண்டே இருக்கிறது.

குறிப்பாக நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் ஐயப்பபக்தர்களின் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.

அதிக கூட்ட நெரிசல், வாகன நெரிசலை அடுத்து சாலை மார்க்க வழித்தடங்கள் பல்வேறு சமயங்களில் மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்த கூட்ட நெரிசலை குறைக்க அங்கு மாற்று வழி போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்தது.

இதற்கான முயற்சி தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. சபரிமையில் பசுமை (கிரீன்பீல்டு) விமான நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்காக 2569 ஏக்கர் பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக 3.4 லட்சம் அளவுக்கு மரங்கள் வெட்டப்பட வேண்டியிருக்கும் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

விமான நிலையம் அமைப்பது தொடர்பாக கோட்டயம் மாவட்ட நிர்வாகம் ஓர் அறிக்கை ஒன்றை கேரளா அரசுக்கு தாக்கல் செய்துள்ளது. அதில், மணிமலா, எரிமேலி (தெற்கு) பகுதியில் மட்டும் 1039 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என்றும், விமான நிலையம் அமைப்பதால் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றாலும், அங்குள்ள 347 குடும்பங்கள் நேரடியாக பாதிக்கப்படுவர். அவர்களின் 238 பேர் அருகில் உள்ள எஸ்டேட் பகுதியில் வேலை பார்ப்பவர்கள்.

விமான நிலையம் அமைக்கப்படுவதால் வெட்டப்படும் 3.4 லட்சம் மரங்களில், 3.3 லட்சம் மரங்கள் ரப்பர் மரங்கள் என்றும், 2492 தேக்கு மரங்கள், 2247 காட்டு பலாமரங்கள், 828 மகோகனி மரங்கள், 1131 சாதராண பலாமரங்கள், 184 மாமரங்கள் அகற்றப்பட வேண்டியிருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியில் உள்ள சில வழிபாடு தளங்களும் அகற்றப்பட வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. இதற்கெல்லாம் மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது என்று கோட்டயம் மாவட்ட நிர்வாகம் அறிக்கை சமர்பித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!