கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடியில் செயல்பட்டு வந்த பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் பயன்படுத்த இயலாத வகையில் இருந்து வந்தது. இது குறித்து சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரத்திடம் புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டி கோரிக்கை விடுத்திருந்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று தளவாய்சுந்தரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று முதலமைச்சர் 110 விதியின் கீழ் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அறிவிப்பு செய்து ரூபாய் 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து இருந்தார். அதனை தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு மிக வேகமாக நடைபெற்று தற்போது நிறைவடைந்தது.
அதனைத் தொடர்ந்து புதிய பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு சங்கத் தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் தியாகராஜன், ஆவின் பொது மேலாளர் தவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவரணிச் செயலாளர் பி.வி.மணிகண்டன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு புதிய பால்பண்ணை கட்டிடத்தை திறந்து வைத்தார். ஆவின் பெருந்தலைவர் எஸ் ஏ அசோகன் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், கவிஞர் சதாசிவம், அகஸ்தீஸ்வரம் யூனியன் சேர்மன் அழகேசன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜெஸீம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் நீல பெருமாள், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் டாக்டர் மாணிக்கம், பேரூர் செயலாளர்கள் மனோகரன், ராஜபாண்டியன், சீனிவாசன், ஆடிட்டர் சந்திரசேகரன், இரவிபுதூர் கூட்டுறவு வங்கி தலைவர் லட்சுமி சீனிவாசன், மயிலாடி வர்த்தகர் சங்கத் தலைவர் சுதாகர், உட்பட பலர் கலந்து கொண்டனர். செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
