
திருப்பரங்குன்றம் அருகே ஆனி திருமஞ்சன விழா: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நடராஜருக்கு மகா அபிஷேகம்.!
சிவாலயங்களில் ஆனி திருமஞ்சன விழா முக்கியமான விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் நடராஜப்பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெறும். இந்த மகா அபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்வதற்காக அன்றையதினம் சிவாலயங்களில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.
அவ்வகையில் ஆனி உத்திர நட்சத்திர தினமான இன்று ஆனித்திருமஞ்சன வைபவம் நடைபெறுகிறது. கோவில்கள் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு நடராஜப் பெருமானுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன விழா கடந்த 13-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், வாகன வீதி உலா நடைபெற்றது.
ஆனித்திருமஞ்சனத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு பல்வேறு திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலாவும் நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித்திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெற்றது.
அந்த வகையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே கூத்தியார் குண்டு என்ற சதுர்வேதமங்கலம் என்ற ஊரில் மிகப் பழமையான பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் உள்ள நடராஜருக்கு ஆனி திருமஞ்சன (உத்திர நட்சத்திர) சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடராஜர், சிவகாம சுந்தரிக்கு மஞ்சள், திரவியம், பச்சரிசி, இளநீர், பால், தேன், கரும்புசாறு, பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப் பட்டு மகா தீபாராதனை நடைபெற்று சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.