
திருப்பரங்குன்றத்தில் பரபரப்பு: ரயில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் கைது.!
நீட் தேர்வுக்கு எதிராக திருப்பரங்குன்றத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் மாணவர்களின் போராட்டமாக வெடித்தது. மாணவர்களுடன் பல்வேறு அமைப்பினரும் இணைந்து இப்போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்று நாட்களாக மாணவர், வாலிபர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மறியல், வகுப்பு புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் என போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் போராடும் மாணவர்களை தமிழ்நாடு காவல்துறை அத்துமீறி வருவது கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் என பல்வேறு அமைப்புகள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெற்றது. திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்திற்குள் புகுந்த மாணவர்கள், வாலிபர்கள், விவசாயத் தொழிலாளர்கள் தண்டவாளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.
அப்போது பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் வந்த பயணிகள் ரயிலை மறித்து முழக்கமிட்டனர். இந்த தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்பு படையினரும், போலீஸாரும் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் அவர்களை குண்டு கட்டாகத் தூக்கி போலீஸார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த பிறகே ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.