
சேவலுக்கு செயற்கைக் கால் பொறுத்திய மாணவிகள்… உயிர் நேயத்தை வென்ற சேவையால் மனம் நெகிழ்ந்த சம்பவம்!





இடது கால் உடைந்த நிலையில் இரை தேடுவதற்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த சேவல் ஒன்றுக்கு செயற்கைக் கால் பொருத்தி அசத்தியுள்ளனர். மதுரை செல்லூரில் அமைந்துள்ள சாய்ராம் வித்யாலயா பள்ளி மாணவியர். சக உயிரின் மீது காட்டிய இந்த அன்பின் காரணமாக பலரது பாராட்டையும் பெற்றுள்ளனர். அது குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பு.
8-ஆம் வகுப்பு பயிலும் ஸ்ருதி, தனது வீட்டின் அருகே ஒரு குடும்பத்தார் சேவல், கோழி போன்றவற்றை வளர்த்து வருகின்றனர். அதில் ஒரு சேவலை கூண்டுக்குள் கட்டி வைத்துவிட்டு, வெளியூர் சென்ற நிலையில், இரைக்காக அச்சேவல் கயிற்றில் இருந்து தன்னை விடுவிக்க முயன்றதால் அதன் இடது கால் பகுதி அறுக்கப்பட்டு புண்ணாகி விட்டது. இந்நிலையில் அக்குறிப்பிட்ட கால் பகுதி துண்டாகிவிட, சேவல் தனக்கான இரையைத் தேட மிகவும் சிரமப்பட்டது.
இதனைக் கண்டு பரிதாபம் கொண்ட மாணவி ஸ்ருதி, சாய்ராம் வித்யாலயா பள்ளியில் தன்னுடன் பயிலும் சிவயாழினி, தீக்ஷனா, கிருத்திகா ஸ்ரீ ஆகியோரோடு பேசி, அந்த சேவலைக் காப்பாற்ற முடிவு செய்கிறார். தனது பள்ளியில் புத்தாக்க வழிகாட்டி ஆசிரியராகப் (Innovation Mentor) பணியாற்றும் அப்துல் ரசாக்கிடம் இதுகுறித்து தெரிவிக்கிறார். ஆசிரியர் வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில் மாணவி ஸ்ருதி தலைமையில் நான்கு பேர் கொண்ட ‘விஞ்ஞானிகள் குழு’ களமிறங்குகிறது.

அண்டை வீட்டாரின் அனுமதியோடு பள்ளிக்கு அந்த சேவலைக் கொண்டு வந்து, அதற்குத் தேவையான உணவை வழங்கி, 2-3 நாட்கள் மாணவ விஞ்ஞானிகளால் இதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெறுகின்றன. பள்ளி முதல்வர் லட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்கள் முழு அனுமதி வழங்கி, மாணவியரின் முயற்சிக்கு ஊக்கம் அளித்தனர்.
இதுகுறித்து மாணவி ஸ்ருதி கூறுகையில், ‘இந்த சேவலைக் காப்பாற்றுவதற்காக Artificial Cock Leg ஆர்டிபிஷியல் காக் லெக் என்ற inventionஐ செய்தோம். என்னுடைய வீட்டின் அருகே மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த இந்த சேவலை தூக்கி வந்து, துண்டிக்கப்பட்ட சேவலின் காலை அளவெடுத்து, அப்துல் சார் ஆலோசனையோடு எங்கள் பள்ளியில் உள்ள முப்பரிமாண அச்சுப்பொறியில் (3D Printer) வடிவமைப்புச் செய்து செயற்கைக் கால் ஒன்றை உருவாக்கினோம். தற்போது அதனை சேவலுக்குப் பொருத்தி சோதனை செய்ததில், முன்பைவிட நடக்க முயற்சித்ததுடன் சுயமாக இரை தேடவும் அந்த சேவலால் முடிந்தது’ என்கிறார்.
மாணவிகள் 4 பேரும் ஒன்று சேர்ந்து இந்த இந்த கண்டுபிடிப்பை கூட்டு முயற்சியோடு மேற்கொண்டனர். அளவெடுத்து, கால் குறித்த வடிவமைப்பை வரைந்து, அதன் நீள, அகலங்களைச் சரியாகக் குறித்து, பிறகு பள்ளியில் உள்ள புத்தாக்க மையத்தின் (Innovation Center) கணினி ஆய்வகத்தில் (Computer Lab) கொடுத்து கேட் (CADD) மூலமாக சேவலுக்கான செயற்கைக்காலை வடிவமைப்புச் செய்தனர். அக்கணினியிலிருந்து Fused Deposition Modeling வகை முப்பரிமாண அச்சுப்பொறியின் மூலம் நகலெடுத்தனர் (Prototype). கணினியிலிருந்து கட்டளை பிறப்பித்தவுடன் இந்த இயந்திரத்தின் மூலமாக நகல் உருவாவதற்கு குறைந்தது 2 மணி நேரம் ஆகிறது.
மாணவி சிவ யாழினி கூறுகையில், ‘எங்கள் பள்ளி வளாகத்தில் உள்ள மற்ற கோழிகளும்கூட அந்த சேவலை தங்களோடு சேர்த்துக் கொள்ளாத நிலையில், எங்களுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. இதுவே எங்களது கண்டுபிடிப்புக்கு தூண்டுகோலாக அமைந்தது. உணவு உண்ணக்கூட முடியாமல் தனிமையில் ஓரிடத்திலேயே நின்று கொண்டிருந்தது. இந்த செயற்கைக்கால் பொருத்திய பிறகு சோதனை முறையில் சேவலை நடக்கச் செய்தபோது டைல்ஸ் போன்ற தரை தளங்களில் வழுக்கி விழுந்ததைப் பார்த்தோம். அதற்கு கிரிப் கொடுப்பதற்காக காலின் அடியில் ‘ரப்பர் புஷ்’ ஒன்றை பொருத்தினோம். அதேபோன்று அந்தக் காலை சேவலால் அசைக்கக்கூடிய வடிவமைப்பையே நாங்கள் செய்துள்ளோம்’ என்றார்.

குறிப்பிட்ட முப்பரிமாண அச்சுப்பொறியை பொறுத்தவரை,
CAD மென்பொருளில் (SolidWorks, Fusion 360, AutoCAD போன்றவை) 3D மாதிரி வடிவமைக்கப்படுகிறது. அந்த கோப்பு STL அல்லது OBJ வடிவில் சேமிக்கப்படுகிறது. FlashPrint அல்லது Cura போன்ற Slicer மென்பொருள் மூலம் G-code ஆக மாற்றப்படுகிறது. அச்சுப்பொறியில் Filament சூடாக்கப்பட்ட Nozzle வழியாக உருகி வெளியேறும்.
மிக மெல்லிய அடுக்குகளாக (Layers) ஒன்றின் மேல் ஒன்று சேர்த்து முழுப் பொருளையும் (Prototype) உருவாக்குகிறது.
மாணவியரின் இந்த சாதனையைப் பாராட்டி சாய்ராம் கல்வி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் அருண்குமார், ‘கல்வி என்பது தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வது மட்டுமல்ல, அதை உயிர்களுக்கு பயனுள்ள வகையில் பயன்படுத்தக் கற்றுக் கொள்வதும் ஆகும். சிறிய கருணைச் செயல்கூட மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை மாணவர்கள் நிரூபித்துள்ளனர்’ என்று தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து புத்தாக்க வழிகாட்டி ஆசிரியர் அப்துல் ரசாக் கூறுகையில், ‘புத்தாக்க (Innovation) சிந்தனையுள்ள மாணவ, மாணவிகளை உருவாக்கி வருவதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற புதிய தலைமுறை மாணவ, மாணவிகளை உருவாக்கி நம் சமூகத்திற்குத் தர வேண்டும் என்பதே எனது இலக்கு. இந்நான்கு மாணவியரும் கால் ஒடிந்த இந்த சேவலை என்னிடம் கொண்டு வந்து ஆலோசனை கேட்டனர். ரோபோட்டிக்ஸ் தெரிந்த மாணவர்கள் என்பதால், சேவலுக்கு செயற்கைக் கால் உருவாக்குவது மிக எளிதாக இருந்தது. முறையாக அளவெடுத்து கணினி மூலமாக வடிவமைப்புச் செய்து 3டி வழியாக நகலெடுத்துப் பொருத்தி சேவலை மீண்டும் நடக்க வைத்துள்ளனர். இந்த முறையில் அனைத்து விலங்கினங்களுக்கும் செயற்கைக் கால் பொருத்த முடியும்’ என்றார்.
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் மண்ணில் வாடிய உயிரின் தேவையைக் கருத்திற் கொண்டு, ஆக்கப்பூர்வ செயல்பாட்டை முன்னெடுத்து சேவலின் உயிரைக் காப்பாற்றியுள்ள இந்த மாணவ விஞ்ஞானிகளின் செயல்பாடு உள்ளபடியே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.