பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்..-விஜய் வசந்த் பேட்டி..

பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கண்டிப்பாக அது அவர்களுக்கு பின்னடைவாக தான் இருக்கும் என மறைந்த வசந்தகுமார் எம்பியின் மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை கொண்டாடும் விதமாக நாகர்கோவில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் மறைந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர். ஹச். வசந்தகுமாரின் மகனும், அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான விஜய்வசந்த் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மளிகைப்பொருட்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜய்வசந்த் கூறியதாவது:

டெல்லியில் குளிரில் போராடும் விவசாயிகளை மத்திய அரசு இழிவு படுத்திவருகிறது. விவசாயிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டியவைகளை செய்யமால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற விவசாயிகளை மத்திய அரசு நடுரோட்டில் விட்டுள்ளனர்.

இந்த செயலை கண்டிப்பாக காங்கிரஸ் எதிர்க்கிறது. இதனால் மேலும் போராட்டம் தீவிரம் அடையும். விவசாயிகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது.வேளாண் மசோதா திட்டத்தை அமல்படுத்தும் முன்பே ரோட்டிற்கு விவசாயிகள் வந்துவிட்டனர். அப்படியானால் இந்த திட்டம் அமல்படுத்தினால் விவசாயிகள் நிலைமை என்னவாகும் என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.

அதிமுக-பாஜக கூட்டணி குறித்து தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்த பிறகு முடிவுசெய்து கொள்ளலாம். ஆனால் எங்கள் கூட்டணி மிகவும் உறுதியான கூட்டணியாக உள்ளது. அவர்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை டெல்லி தலைமை தான் முடிவு செய்யும் என்றால் அதிமுக அரசு பாஜக அரசின் கீழ்தான் செயல்படுகிறது என்பது உறுதியாகியுள்ளது.

பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கண்டிப்பாக அது அவர்களுக்கு பின்னடைவாக தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

error: Content is protected !!