ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியை ஓரிரு வாரத்தில் தொடங்க வேதாந்தா நிறுவனம் திட்டம்?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியைத் தொடங்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 2 வாரத்திற்குள் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க வேதாந்தா நிறுவனம் திட்டமிடிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கொரோனாவின் 2ஆவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க திரவ நிலையிலான ஆக்சிஜன் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்திற்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருவதாக, மூடப்பட்டிருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது. இது குறித்து விவாதிக்க, சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில், ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆக்சிஜன் உற்பத்தியை மட்டும் செய்வதற்கு தற்காலிக அனுமதி கொடுக்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசு அனுமதி அளித்தால் 7 முதல் 14 நாட்களுக்குள் உற்பத்தியை தொடங்குவதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இன்னும் 2 வார காலத்திற்குள் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து ஸ்டெர்லைட் ஆலையை நிர்வகித்து வரும் வேதாந்தா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவ தர ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் நோக்கத்திற்காக 1,000 டன் முழு உற்பத்தித் திறனையும் கிடைக்கச் செய்வதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

மேலும் இதை தமிழகத்தின் தேவைப்படும் பகுதிகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலும், இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் அனுப்பும் தளவாடங்களை எந்த வகையில் சிறப்பாக கையாளுவது என்பது குறித்து நிபுணர்களுடன் இணைந்து ஏற்கனவே விவாதித்து வருகிறோம்” என்று கூறியுள்ளது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆக்சிஜன் விநியோகத்தில் தமிழகத்திற்கே முன்னுரிமை அளிப்பது உட்பட 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, உச்சநீதிமன்ற உத்தரவின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனத்தில் அமைந்துள்ள ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த இயந்திரங்களை மட்டும் சீர்செய்து இயக்கி கொள்ள 4 மாதங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.

ஆக்சிஜன் தேவையைக் கருத்தில் கொண்டு, நிலவும் சூழ்நிலையின் அடிப்படையில் இந்த கால அவகாசம் பின்னர் நீட்டிக்கப்படலாம் என தீர்மானிக்கப்பட்டது. மேலும், ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி பிரிவிற்கு, தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் மின் இணைப்பு வழங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் தாமிர உற்பத்தி உட்பட எந்தவித பிரிவையும் எக்காரணம் கொண்டும் திறக்கவோ, இயக்கவோ அனுமதி இல்லை என தீர்மானிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தமிழ்நாட்டிற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் தேவை போக அதிகப்படியாக உள்ள ஆக்சிஜனை மட்டும் பிற மாநிலங்களுக்கு வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. ஆக்சிஜன் உற்பத்தியுடன் நேரடி தொடர்புடைய தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டும் உரிய அனுமதிச் சீட்டுடன் ஸ்டெர்லைட் ஆலைக்குள் அனுமதிக்கப்படுவர்.

தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உறுதி செய்யும். எக்காரணத்தைக் கொண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் அலகைத் தவிர வேறு எந்த அலகும் செயல்பட அனுமதிக்கப்படாது. தற்காலிக ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க தமிழ்நாடு அரசால் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஒரு கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் தயாரிக்கும் முழு பணியையும் இந்தக் குழு மேற்பார்வையிடும் என்றும், ஆக்சிஜன் தயாரிப்பு பிரிவை இயக்குவது பற்றி இந்தக் குழு முடிவெடுக்கும் என்றும் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், தமிழக அரசின் தீர்மானம் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்ககது.

Leave a Reply

error: Content is protected !!