டிஎல்எஸ் முறையில் வங்கதேசத்தை வென்ற ஆஸி.; கம்மின்ஸ் ஹாட்ரிக் | T20 WC

ஆஸி. வீரர்கள்

ஆன்டிகுவா: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ குரூப்-1 ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலிய அணி. டக்வொர்த் லூயிஸ் முறையில் 28 ரன்களில் ஆஸி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கம்மின்ஸ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். டேவிட் வார்னர் அரைசதம் கடந்தார்.

மேற்கு இந்தியத் தீவுகளில் ஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவர்களில் 140 ரன்கள் எடுத்தது. அந்த அணி சார்பில் கேப்டன் ஷான்டோ 41, தவ்ஹீத் 40 ரன்கள் எடுத்தனர்.

முதல் இன்னிங்ஸின் 18-வது ஓவரில் கடைசி இரண்டு பந்துகள் மற்றும் கடைசி ஓவரின் முதல் பந்து என ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார் கம்மின்ஸ். வங்கதேசத்தின் மஹ்மதுல்லா, ஹாசன் மற்றும் தவ்ஹீத் விக்கெட்டுகளை அவர் வீழ்த்தினார்.

இதன் மூலம் டி20 உலகக் கோப்பை ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது ஆஸி. பவுலர் ஆனார். முன்னதாக, கடந்த 2007 டி20 உலகக் கோப்பை தொடரில் பிரெட் லீ, இதே வங்கதேச அணிக்கு எதிராக ஹாட்ரிக் வீழ்த்தி இருந்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கம்மின்ஸ் கைப்பற்றியுள்ள முதல் ஹாட்ரிக் இது.

ஆஸி. விரட்டல்: டேவிட் வார்னர் மற்றும் டிராவிஸ் ஹெட் இணைந்து இரண்டாவது இன்னிங்ஸை ஓபன் செய்தனர். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஹெட், 21 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் மிட்செல் மார்ஷ், 1 ரன்னில் வெளியேறினார். மேக்ஸ்வெல், 14 ரன்கள் எடுத்தார்.

11.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்திருந்தது ஆஸ்திரேலியா. அந்த அணியின் வெற்றிக்கு மேலும் 41 ரன்கள் தேவைப்பட்டது. 35 பந்துகளில் 53 ரன்கள் எடுத்திருந்தார் வார்னர். அப்போது மழை குறுக்கிட்டது. அதன் காரணமாக டக்வொர்த் லூயிஸ் முறையில் 28 ரன்களில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது. இந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை கம்மின்ஸ் பெற்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!