சென்னை: இந்தியாவில் பல மாநிலங்களில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2840 முதல் ரூ.3100 வரை வழங்குவதைப் போல் தமிழ்நாடு அரசும் நெல்லுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமிநடராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நடப்பாண்டு காரீஃப் பருவத்திற்கான வேளாண் விளைப்பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்தது. அறிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலை என்பது உற்பத்தி செலவுகளோடு ஒப்பிடும் போது மிக குறைவானது. குறிப்பாக 2014 முதல் மத்திய ஆட்சி பொறுப்பில் உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு தேசிய விவசாயிகள் ஆணையம் பரிந்துரைப்படி உற்பத்தி செலவுகளோடு சேர்த்து 1.5 மடங்கு உயர்த்தி வழங்குவோம் என விவசாயிகளுக்கு உறுதியளித்தது (சி2+50).
ஆனால் தற்போது வரை இந்த அடிப்படையில் வேளாண் விளைபொருட்களுக்கு விலை அறிவிக்காமல் விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு துரோகம் செய்து வருகிறது. சி2+50-ன் படி நெல்லுக்கு விலை அறிவிக்கப்பட்டிருந்தால் குவிண்டாலுக்கு 3012 ரூபாய் விலை கிடைத்திருக்கும். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை குவிண்டாலுக்கு 2300 ரூபாய் மட்டுமே. இதன் மூலம் ஒரு குவிண்டாலுக்கு விவசாயிகள் 712 ரூபாயை இழக்கின்றனர்.PauseMute
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சியில் உள்ள அரசு தேர்தல்கால வாக்குறுதியாக ஆட்சிக்கு வந்தவுடன் நெல் குவிண்டாலுக்கு 2500 ரூபாய் விலை கொடுப்போம் என்றார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் கடந்த நிலையில் இதுவரை குவிண்டாலுக்கு 2500 ரூபாய் வழங்கவில்லை.
குறிப்பாக நடப்பாண்டு ஒன்றிய அரசு அறிவித்துள்ள விலையோடு சேர்த்து தமிழ்நாடு அரசு தனது பங்காக உயர்த்தியுள்ள ஊக்கத்தொகை பொது ரகத்திற்கு குவிண்டாலுக்கு 105 ரூபாயும், சன்ன ரகத்திற்கு குவிண்டாலுக்கு 130 ரூபாயும் மட்டுமே உயர்த்தியுள்ளது. இது விவசாயிகளுக்கு திருப்தியளிக்கவில்லை.
கடந்தாண்டு மாநில அரசு பொதுரகத்திற்கு குவிண்டாலுக்கு 82 ரூபாயும், சன்னரகத்திற்கு 105 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கியது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஊக்கத்தொகை பொதுரகத்திற்கு குவிண்டாலுக்கு 23 ரூபாய், சன்னரகத்திற்கு குவிண்டாலுக்கு 25 ரூபாய் மட்டுமே என்பது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றமளிக்கிறது. உற்பத்தி செலவுகள் மிக அதிகமாக அதிகரித்து வரும் சூழலில் குவிண்டாலுக்கு 3000 ரூபாய் விலை கிடைத்தால்தான் விவசாயிகளுக்கு ஓரளவுக்கு கட்டுபடியாகும் சூழலில் மாநில அரசின் ஊக்கத்தொகை அறிவிப்பு அதற்கு ஏற்றார்போல் இல்லை.
உதாரணமாக, இந்தியாவில் வேறு பல மாநிலங்களில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2840 முதல் ரூ.3100 வரை வழங்குவதைப் போல் தமிழ்நாடு அரசும் மறுபரிசீலனை செய்து நெல்லுக்கான ஊக்கத்தொகையை உயர்த்தி வழங்கிடுமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.