சென்னை: சென்னையில் இன்று முதல் (ஜூன் 25) டிஎன்சிஏ – பிரேயர் டிராபி மகளிர் கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) – பிரேசர் கோப்பைக்கான மகளிர் டி20, ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டி இந்த ஆண்டு இன்று முதல் (ஜூன் 25) நடைபெறவுள்ளது. முதலில் டி20 போட்டிகள் நடைபெறும். ஜூலை 1-ம் தேதி முதல் ஒரு நாள் போட்டிகள் நடைபெறும். வளர்ந்து வரும் திறமையான இளம் வீராங்கனைகளைக் கண்டறியும் நோக்கில் இப்போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
போட்டியில் கிரீன் இன்வேடர்ஸ், சில்வர் ஸ்டிரைக்கர்ஸ், பிங்க் வாரியர்ஸ், புளூ அவெஞ்சர்ஸ், யெல்லோ சாலஞ்சர்ஸ், ரெட் ரேஞ்சர்ஸ், ஆரஞ்ச் டிராகன்ஸ், பர்ப்பிள் பிளேசர் ஆகிய 8 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்தப் போட்டியானது தமிழ்நாடு மகளிர் சீனியர், 23 வயதுக்குட்பட்டோர், 19-வது வயதுக்குட்பட்டோர், 15 வயதுக்குட்பட்டோர் ஆகிய போட்டிகளுக்கு வீராங்கனைகளைத் தேர்வு செய்வதாக அமையும்.
போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு சுழற்கோப்பைகள், சான்றிதழ்கள், சிறப்பு விருதுகள் வழங்கப்படும். இன்று காலை 8.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கிரீன் இன்வேடர்ஸ் அணி, சில்வர் ஸ்டிரைக்கர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இதே நேரத்தில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் யெல்லோ சாலஞ்சர்ஸ், ரெட் ரேஞ்சர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
பகல் ஒரு மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பிங்க் வாரியர்ஸ், புளூ அவெஞ்சர்ஸ் அணிகள் களம் காண்கின்றன. இதே நேரத்தில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் ஆரஞ்ச் டிராகன்ஸ், பர்ப்பிள் பிளேசர்ஸ் அணிகள் விளையாடவுள்ளன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.