கடல் போல் காட்சி அளிக்கும் நிலையூர் கண்மாய்..!
மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள விவசாயிகள் கண்மாய்களை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் பெரிய கண்மாய்களின் ஒன்றாக இருக்கக்கூடியது தான் இந்த நிலையூர் பெரிய கண்மாய். திருப்பரங்குன்றம் வட்டம் நிலையூர் 1வது ஊராட்சிக்குட்பட்ட கூத்தியார்குண்டு பகுதியில் அமைந்துள்ள இந்த கண்மாயை நம்பியே திருப்பரங்குன்றம், திருமங்கலம் பகுதியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்தக் கண்மாய்க்கு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு நிலையூர் கால்வாய் வழியாக தண்ணீர் வருகின்றது.
நிலையூர் பெரிய கண்மாய் சுமார் 700 ஏக்கர் பரப்பளவும், சுமார் 27 அடி ஆழமும், பாலமேடு சாத்தனூர் அணையை விட 7 மடங்கு கொள்ளளவும் கொண்டது. இந்த கண்மாயில் பெரியமடை, சின்னமடை, உள்மடை என 3 மடைகளும், பெரிய கலுங்கு, சின்னக்கலுங்கு என 2 கலுங்கும் உள்ளது.
இதன் மூலம் 1000 ஏக்கருக்கும் மேலான நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இக்கண்மாய் நிரம்பினால் 25 கி.மீ., சுற்றளவிற்கு நிலத்தடி நீர் உயரும். இரண்டு ஆண்டுகளுக்கு நீர்நிலைகள் வற்றாது.
தற்பொழுது மதுரை மற்றும் மதுரையை சுற்றியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வைகை அணையின் மூலம்நீர் திறந்து விடப்பட்டு உபரி நீர் மூலமாக இந்த நிலையூர் பெரிய கண்மாய் நிரம்பி வரும் நிலையில் கடல் போல் காட்சியளிக்கின்றது.
இவ்வளவு பெருமைகளை கொண்ட நிலையூர் பெரிய கண்மாயில் நீர்ப்பிடிப்பு பட்டாக்கள் மூலம் வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதனால் கண்மாய் பரப்பளவு சுருங்கி 400 ஏக்கர் பரப்பளவாக காணப்படுகிறது.
பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நிலையூர் பெரிய கண்மாய் கடல் போல் காட்சி அளிப்பதால் அப்பகுதியை சுற்றியுள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.