
புதுடெல்லி: டி20 உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணியினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது இந்திய அணி வீரர்களுடன் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் திராவிட் ஆகியோர் இருந்தனர்.
மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி. இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 7 ரன்களில் வென்றது இந்தியா. டி20 உலகக் கோப்பை அரங்கில் இந்திய அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2007-ல் தோனி தலைமையிலான அணி பட்டம் வென்றிருந்தது.
தற்போது சாம்பியன் பட்டம் வென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகளின் பார்படாஸ் நகரில் இருந்து நேற்று புறப்பட்டு இன்று (வியாழக்கிழமை) காலை தாயகம் திரும்பியது. டெல்லி வந்த அவர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதன் பின்னர் இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார். பின்னர் அனைவரும் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த சந்திப்பு முடிந்ததும் இந்திய வீரர்கள் டெல்லியில் இருந்து மும்பை புறப்பட்டனர். இன்று மாலை மும்பையில் பேருந்தில் வெற்றி உலா வர உள்ளனர். இது தொடர்பாக கேப்டன் ரோகித், சமூக வலைதள பதிவு ஒன்றையும் பகிர்ந்திருந்தார். இந்த வெற்றி உலாவுக்காக மும்பையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.