ஆர்ப்பரித்து கொட்டும் குட்லாடம்பட்டி அருவி..
இது மதுரையின் குற்றாலம்,சுற்றுலா பயணிகள் கடந்த ஓராண்டாக காண முடியாமல் தவிக்கும் குட்லாம்பட்டி தடாகநாச்சியார் நீர் வீழ்ச்சி, கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குற்றாலம் போன்றே மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே சிறுமலை மலைப்பகுதியில் உள்ளது குட்லாடம்பட்டி. இயற்கை எழில் சூழ்ந்த மலைகளின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அந்த அருவிதான் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட மக்களின் மினி குற்றாலம்.
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவியை அடைய சிறிது தூரம் மலை ஏறி செல்ல வேண்டும்.
மதுரையில் கடந்த சில ஆண்டுகளாக சரிவர மழை பெய்யாததால் குட்லாடம்பட்டி அருவில் போதிய நீர் வரத்து இல்லாமல் இருந்தது. கடந்த ஆண்டு ஓரளவிற்கு மழை பெய்ததால் சிறிது நீர் வரத்து இருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக கடந்த ஆண்டு சம்மந்தப்பட்ட அருவியில் பொதுமக்களை அனுமதிப்பதை வனத்துறை தடை செய்தது.
இதனால் குற்றாலம் செல்லவேண்டிய நிலைக்கு சுற்றுலா பயணிகள் தள்ளப்பட்டனர். வெறும் அருவி என்பதை கடந்து இயற்கை எழில் கொஞ்சும் மலை பாதையில் நடந்து செல்லும் ரம்யமான அனுபவத்தை தருவதால் குட்லாடம்பட்டியை இயற்கை ரசிகர்கள் அதிகம் விரும்புவர்.
வனத்துறையின் தடையால் கடந்த ஓராண்டாக இயற்கை விரும்பிகளின் பார்வை தடாகநாச்சியார் நீர் வீழ்ச்சி மீது விழவில்லை. தற்போது பெய்து வரும் மழை காரணமாக நல்ல நீர் வரத்து இருந்தும் Covid-19ன் ஊரடங்கு காரணமாக யாரும் குளிக்க அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.