“தொடர்ந்து சிறந்த டெலிவரி வீச முயற்சிக்கிறேன்” – ஹர்திக் பாண்டியா | T20 WC

கோலி, ரோகித் மற்றும் ஹர்திக்

செயின்ட் லூசியா: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரின் ‘சூப்பர் 8’ குரூப்-1 போட்டியில் இன்று இரவு இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்த தொடரில் தனது செயல்பாடு குறித்து இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்தது குறித்து பார்ப்போம்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி உடனான கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் இந்த தொடரில் 3 இன்னிங்ஸில் பேட் செய்து 89 ரன்கள் எடுத்துள்ளார். 5 போட்டிகளில் பந்து வீசி 8 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

“நான் விக்கெட் வீழ்த்த முயற்சிப்பதில்லை. நான் சிறந்த முறையில் ஒவ்வொரு பந்தையும் வீச முயற்சிக்கிறேன். அணிக்கு என்ன தேவையோ அதை செய்ய விரும்புகிறேன். இதை பும்ரா உடன் பேசி இருந்தேன். இந்த விளையாட்டில் சூழலுக்கு ஏற்ப செயல்பட வேண்டும். அதற்கு ஏற்ற வகையிலான பந்தினை வீச வேண்டும். அந்த செயல்பாட்டில் விக்கெட் வீழ்த்துவது சிறந்ததாக அமையும்.

நான் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த கடுமையாக பயிற்சி செய்ய வேண்டி இருக்கும். அது எனக்கு நம்பிக்கை தரும். கூடவே அணிக்கு சிறந்த முறையில் பங்களிப்பு தரவும் வாய்ப்பு தரும். நான் சிறப்பாக பந்து வீசினால் அது எனது பேட்டிங்கிலும் எதிரொலிக்கும்

ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப எனது பேட்டிங் செயல்பாடும் இருக்கும். ஆப்கானிஸ்தான் உடன் பேட் செய்தது நம்பிக்கை தந்தது. வங்கதேச போட்டியில் பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியும் என அறிந்திருந்தேன். நான் ஸ்மார்ட்டாக விளையாட முயற்சிக்கிறேன்” என ஹர்திக் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாகவே அவரது செயல்பாட்டின் மீது விமர்சனங்கள் இருந்து வருகின்றன. அது அனைத்துக்கும் விடை காணும் வகையில் இந்த தொடரில் விளையாடி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!