கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆன்லைனில் பணம் முதலீடு செய்து சம்பாதிக்க கணவன் பணம் தராததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை. கோட்டார் போலீசார் விசாரணை.
குமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ரூபன் 32. மர வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நந்தினி 26 என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில் நந்தினியின் தோழிகள் சிலர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரைப் பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்துள்ளனர். அப்போது ஆன்லைன் மூலம் பணத்தை முதலீடு செய்து அதிகளவு சம்பாதிக்கலாம் என்று நந்தினியிடம் கூறியதாக தெரிகிறது.
இதனை நம்பிய நந்தினி கணவனிடம் ஆன்லைனில் பணத்தை முதலீடு செய்து சம்பாதிப்பதற்காக பணம் கேட்டுள்ளார். இதை நம்பாத ரூபன் இது மோசடியாக இருக்கும் இதில் முதலீடு செய்ய நான் பணம் தர மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதனால் நந்தினி மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு அனைவரும் தூங்கிய பிறகு நந்தினி வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். நந்தினி இறந்ததை இன்று காலை தான் அவரது உறவினர்கள் பார்த்தனர்.
இதுகுறித்து அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து நந்தினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.