கன்னியாகுமரி: குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்புதூர் ஊராட்சியில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக்கினை தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் இன்று திறந்து வைத்தார்.
பொதுமக்களின் ஆரோக்கியத்தினை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் அம்மா மினி கிளினிக் என்ற பெயரில் சுமார் 2 ஆயிரம் கிளினிக்கினை கிராமங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் ஆரம்ப சுகாதாரம் நிலையத்திற்குட்பட்ட காட்டுப்புதூர் கிராமத்தில் சுமார் 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட கட்டிடத்தினை இன்று தமிழ்நாடு அரசு டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
மேலும் இந்த மினி கிளினிக்கில் ஒரு மருந்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இங்கு பல்வேறு நோய்களுக்கு பரிசோதனை செய்து கொள்ளும் வசதிகள் உள்ளதுடன் சளி, காய்ச்சல் போன்ற எளிதாக சிகிச்சை அளிக்கக்கூடிய நோய்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்படும் என அறிவிக்கபட்டுள்ளது.