தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அருமனை கிருஸ்துமஸ் விழாவில் கலந்து கொள்ள வருகிற 22 ம் தேதி குமரி மாவட்டம் வருகிறார். இந்தநிலையில் விழா மேடை அமைக்கும் பகுதிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் நேற்று ஆய்வு நடத்தினார்.
குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டம் அருமனை பகுதியில் கிறிஸ்தவ அமைப்பு சார்பில் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக பல அரசியல் கட்சி தலைவர்கள் வரவழைக்கப்பட்டு கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்வில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் கலந்து கொண்டு சிறப்பித்து உள்ளார் இந்த நிலையில் வருகிற 22 ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு கிறிஸ்துமஸ் விழா கொண்டாட உள்ளார்.
இதற்க்காக குமரி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் வர உள்ள நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் விழா நடக்கும், மேடை அமைக்கும் பகுதி மற்றும் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்கள் உள்ளிட்டவற்றை நேரடியாக வந்து ஆய்வு நடத்தினார்.
மேலும், விழா நடத்தும் கிறிஸ்தவ அமைப்பின் பொறுப்பாளர்களிடம் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். விழா நடப்பதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் விழா மேடை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை அதிமுக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் உள்ளிட்ட கட்சி மேலிட பொறுப்பாளர்களும் வந்து ஆய்வுகள் நடத்தி மேடை அமைப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர்.