தண்ணீரிலிருந்துதான் உலகில் உயிரின தோற்றங்கள் உருவாகியது என அறிவியல் ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இன்று மனிதனுடைய அடிப்படைத் தேவைகளில் உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்தபடியாக சுத்தமான குடிநீரும் இடம்பெற்றது. அந்தளவுக்குத் தண்ணீரின் தேவை இன்றைக்கு அதிகரித்துள்ளது.
இயற்கையில் வரப்பிரசாதமான நீரின் முக்கியத்துவம் அறியவே கடந்த 1993-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மார்ச் – 22ம் தேதி உலக தண்ணீர் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. இந்நாள் தண்ணீரின் சிறப்புகளைக் கூற மட்டுமல்ல, தண்ணீரின் அறியப்படாத உண்மைகள் மற்றும் தண்ணீரின் அவசியங்களை மக்களுக்கு உணர்த்துவதற்கான நாள் என ஐநா சபை தெரிவித்துள்ளது.
தண்ணீரின் அவசியத்தை வலியுறுத்திக் கடந்த 1992-ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சிக்கான ஐநா சபை மாநாட்டில் மார்ச் 22-ம் தேதி உலக தண்ணீர் தினமாகக் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் கடந்த 1993-ம் ஆண்டிலிருந்து இந்நாள் உலகத் தண்ணீர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான உலக தண்ணீர் தினம் “நீருக்கு உகந்த மரியாதை கொடுப்போம்”. அத்தியாவசிய தேவைகள், பாரம்பரியம், கலாச்சாரம், பொருளாதாரம், ஆரோக்கியம், கல்வி, வளர்ச்சி எனச் சுற்றுச்சூழலுடன் நீர் ஒன்றியிருப்பதால் நீரைப் பாதுகாக்கவும் போற்றவும் மக்களுக்குத் தெரியவேண்டும் என்று கருத்துடன் உலக தண்ணீர் தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
தெரிந்துகொள்ளவேண்டிய உண்மைகள்:
உலகில் வரும் 2050-ம் வருடத்திற்குள் ஏறத்தாழ 570 கோடி மக்கள் ஒரு வருடத்திற்கு ஒரு மாதமாவது தண்ணீர் பஞ்சத்தால் அவதிப்படுவார்கள் என ஐநா சபை எச்சரித்துள்ளது.
இன்று மூன்றில் ஒரு பங்கு மக்கள் குடிக்கச் சுத்தமான நீரின்றி தவிக்கின்றனர்.
சுற்றுச்சூழல் வெப்பநிலையை 1.5 செல்சியஸ் குறைக்க உலக நாடுகள் அனைத்தும் முயற்சி மேற்கொண்டால் கால சூழ்நிலையால் ஏற்படக்கூடிய தண்ணீர் பற்றாக்குறையை 50 சதவீதம் வரை கட்டுப்படுத்த முடியும்.
கடந்த 10 வருடத்தில், பருவநிலை மாற்றம் காரணமாக 90 சதவீத இயற்கை பேரழிவுகள் ஏற்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணிகளாக இருப்பது உலக நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நீர்ப் பற்றாக்குறையால் உலகிலுள்ள பெரும்பாலான பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்குக் கைகளை சுத்தம் செய்யகூட தண்ணீர் வசதிகள் அமைக்கப்படாமல் உள்ளது.
தண்ணீர் மாசுபாடு காரணமாக உலகளவில் தினமும் 5 வயதிற்குட்பட்ட 800க்கும் அதிகமான குழந்தைகள் வயிற்றுப்போக்கால் உயிரிழக்கின்றனர்.
கடந்த 2015-ம் ஆண்டிலிருந்து இந்தியாவில் இருந்து சீனாவுக்கு 3,850,431 லிட்டர் தண்ணீர் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
உலகளவில் 5:1 ஒரு குழந்தை தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள்.
ஆசியாவில் 15.5 கோடி குழந்தைகள் தண்ணீர் பற்றாக்குறையால் வறட்சியான பகுதிகளில் வசிக்கிறார்கள்.
நாட்டில் 6.85 கோடி மக்கள் போதுமான தண்ணீர் வசதி இல்லாத காரணத்தால் வசிப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.