முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட ஊராட்சி சேவை மையம் காட்சி பொருளான பரிதாபம்:பயன்பாட்டுக்கு வருமா?பொது மக்கள் எதிர்பார்ப்பு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்ட ஊராட்சி சேவை மையம் காட்சிப் பொருளாக பரிதாப நிலையில் உள்ளது.


அது மீண்டும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட
எள்ளுவிளை ஊராட்சியில் வைராகுடியிருப்பு, காரவிளை, சட்டுவன் தோப்பு, பிள்ளையார் விளை, பக்தன்காடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்களின் நலன் கருதி சட்டுவன்தோப்பு பகுதியில் ரூ14.55 லட்சத்தில் எம்ஜிஎன்ஆர்ஈஜிஎஸ் எனும் திட்டத்தின் மூலம் ஊராட்சி சேவை மைய கட்டிடம் கட்டப்பட்டது.

அதனை 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதியன்று அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் காணொளி மூலம் திறந்து வைக்கப்பட்டது.அது முதல் தற்போது வரை இக்கட்டிடம் செயல்பாட்டிற்கு வராமலும், பராமரிப்பின்றியும் காட்சிப் பொருளாக காணப்படுகிறது.

தற்போது இந்தக் கட்டிடம் குடிமகன்களின் பாராகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறியுள்ளது.மேலும் கட்டிடத்தை சுற்றி முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து உள்ளதால் குடிமகன்கள் குடித்துவிட்டு போடப்படும் பிளாஸ்டிக் கப், பாட்டில் போன்ற பொருட்களால் சுகாதார சீர் கேடு ஏற்பட்டுள்ளது.

கட்டிடத்தின் பாத்ரூம் கதவுகள் மற்றும் தண்ணீர் செல்லும் குழாய் வால்வுகள் துருப்பிடித்து உடைந்த நிலையில் காணப்படுகிறது.கட்டிடத்தின் வெளிப் பகுதியில் உள்ள மின் விளக்குகள் திருடப்பட்டுள்ளன. கட்டிடத்தின் மேற்பகுதியில் செடி கொடிகள் வளர்ந்துள்ளது. கட்டிடத்தை சுற்றி போடப்பட்டுள்ள கான்கிரீட் நடைபாதை பராமரிப்பின்றி உடைந்து உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி ஊராட்சி சேவை மைய கட்டிடத்தை உடனடியாக போதிய ஊழியர்களை நியமனம் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

error: Content is protected !!