கரூர்: தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் இன்று (ஜூன் 24-ம் தேதி) மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில் நடைபெறாத நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன்ஜாமீன் மீது நாளை (ஜூன் 25) தீர்ப்பு வழங்கப்பட உள்ளதும், அவர் தலைமறைவாக இருப்பதும் அதற்கு காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 58 பேர் உயிரிழந்த நிலையில் பலர் சிகிச்சையில் உள்ளனர். அதிமுக சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இன்று (ஜூன் 24ம் தேதி) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாவட்ட தலைநகரான கரூரில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல் துறையிடம் அனுமதி பெறாததுடன் ஆர்ப்பாட்டத்தற்கான எந்த ஏற்பாடுகளையும் அதிமுக சார்பில் செய்யப்படவில்லை.
கரூரை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நிலமோசடி புகார் தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் கடந்த 12ம் தேதி முன் ஜாமீன் கோரிய நிலையில் அதன் தீர்ப்பு நாளை (ஜூன் 25ம் தேதி) வழங்கப்படும் என்பதாலும், கடந்த 12 நாட்களுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருப்பதாலும் அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டம் கரூரில் நடைபெறவில்லை எனக்கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிமுக அலுவலகத்தை இன்று (ஜூன் 24ம் தேதி) காலை 7.49 மணிக்கு தொடர்பு கொண்டு கேட்டப்போது, ஆர்ப்பாட்டம் குறித்து இதுவரை தகவல் இல்லை. இருந்தால் தெரிவிக்கிறேன் என தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.