
பொன்னேரி: மணலி அருகே விச்சூரில் தனியார் பெயின்ட் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்தைச் சேர்ந்த விச்சூர் பகுதியில் உள்ள சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் தனியார் பெயின்ட் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை நேற்று விடுமுறை நாள் என்பதால் மூடப்பட்டிருந்தது.
இங்கு பெயின்ட் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள பகுதியில் நேற்று மதியம் 2.15 மணியளவில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் வானுயரத்துக்கு கரும்புகை எழுந்தது.
இதுகுறித்து தகவலறிந்த திருவொற்றியூர், செங்குன்றம், அம்பத்தூர், எழும்பூர் உள்ளிட்ட 10 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடம் விரைந்து, தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 20 குடிநீர் லாரிகள் மூலம் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
பெயின்ட் தயாரிப்பதற்கான ரசாயன மூலப் பொருட்கள் கொண்ட பேரல்கள் வெடித்து சிதறியதால், தீயை கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் நீடித்தது. ஆகவே, தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை மட்டுமல்லாமல், ரசாயன நுரையையும் பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்பணி இரவு 7 மணிக்கு மேலும் நீடித்த வண்ணம் இருந்தது. இவ்விபத்தில், தொழிற்சாலை வளாகத்தில் உள்ள 2 கட்டிடங்களும், பல கோடி ரூபாய் மதிப்பிலான மூலப் பொருட்களும், பெயின்ட் வகைகள் உள்ளிட்டவையும் தீக்கிரையாகியிருக்கலாம் என, கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து மணலி புதுநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.