சென்னை: “முதல் பாகத்தில் 40 நாட்கள் தான் அவருக்கு மேக்அப் போட்டோம். இந்தப் படத்தில் 70 நாட்கள் போட்டிருக்கிறோம். தினமும் 3 மணிநேரம் மேக்அப் போட வேண்டும். அப்படி போட்டால், சரியாக சாப்பிட முடியாது. நீராகாரம் தான் ஸ்ட்ரா மூலமாக எடுத்துக்கொள்ள வேண்டும். சவால்களை கடந்து சிறப்பாக நடித்துள்ளார்” என நடிகர் கமல்ஹாசனை, இயக்குநர் ஷங்கர் புகழ்ந்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் ஷங்கர், “இன்றைய சூழலில் இந்தியன் தாத்தா வந்தால் எப்படியிருக்கும் என்பது தான் ‘இந்தியன் 2’. இப்படத்தின் முதல் பாகத்தின் கதை தமிழ்நாட்டில் நடப்பதாக இருந்தது. ஆனால், ‘இந்தியன் 2’ தமிழ்நாடு தாண்டி மற்ற மாநிலங்களுக்கும் கதை விரிகிறது.
இந்தப் படத்தை பொறுத்தவரை, நிறைய கதாபாத்திரங்கள் உண்டு. இந்தியாவில் உள்ள அனைத்து குடும்பங்களும் என்கேஜிங்காக பார்க்க கூடிய படம். இப்படம் முடியும்போது ஒவ்வொருவரையும் இப்படம் யோசிக்க வைக்கும் என நினைக்கிறேன். ‘இந்தியன் 2’ இவ்வளவு சிறப்பாக வருவதற்கு முதல் காரணம் கமல்ஹாசன் தான்.
முதல் பாகத்தில் 40 நாட்கள் தான் அவருக்கு மேக்அப் போட்டோம். இந்தப் படத்தில் 70 நாட்கள் போட்டிருக்கிறோம். தினமும் 3 மணிநேரம் மேக்அப் போட வேண்டும். அப்படி போட்டால், சரியாக சாப்பிட முடியாது. நீராகாரம் தான் ஸ்ட்ரா மூலமாக எடுத்துக்கொள்ள வேண்டும். படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன் கமல் வந்துவிடுவார். படப்பிடிப்பு முடிந்து நாங்கள் கிளம்பிவிடுவோம். கடைசியாக அவர் கிளம்புவார். காரணம் அந்த மேக்அப்பை கலைக்க 1 மணி நேரம் ஆகும்.
முதல் பாகத்தில் கமல் மேக்அப் போட்டு வரும்போது எப்படியான ஒரு சிலிர்ப்பு உருவானதோ, 28 ஆண்டுகள் கழிந்து இந்தப் படத்துக்கும் அவர் மேக்அப் போட்டு வரும்போதும் அதே சிலிர்ப்பு இருந்தது. காலை தொடங்கி மாலை படப்பிடிப்பு முடியும்வரை ரோப்பில் தொங்க வேண்டும். அப்படி 4 நாட்கள் ரோப்பில் தொங்கி நடித்தார் கமல்ஹாசன். பஞ்சாபியில் பேச வேண்டும், நடிக்க வேண்டும், ஸ்லோமோஷன் காட்சிகள் வேறு. இப்படி பல சவால்களை எதிர்கொண்டு நடித்தார். அவரைப் பார்க்கும்போது எனக்கு பிரம்மிப்பாக இருக்கிறது. சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி.
நான் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக பாடல்களை இசையமைத்துக் கொடுத்துள்ளார். 100 சதவீதம் திருப்தியாகும் வரை ட்யூன் போட்டுக் கொடுத்துள்ளார் அனிருத். மற்ற நடிகர்களும் சிறப்பா நடித்துக் கொடுத்துள்ளனர்” என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.