சீமான் கைது.. திமுக ஆட்சிக்கு முடிவுரை – நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம். -வெற்றிக் குமரன்.
தமிழகத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தி வருவதால், அ.தி.மு.கவினர் மற்றும் பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில், அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தை கண்டித்து நாம் தமிழர் கட்சி சில தினங்களுக்கு முன்பு போராட்டத்தை அறிவித்து போலீசாரிடம் அனுமதி கேட்டது. அதற்கு போலீசார் அனுமதி தர மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், நாளை புத்தாண்டு தினம் கொண்டாடப்படுவதால் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஒன்று கூடி போராட்டம் நடத்த முயன்றனர். தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றதால் நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். மேலும், கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்த நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் போலீசாரின் முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்) வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த நிலையில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட்ட நீதிமன்றம், அண்ணாநகர் துணை ஆணையர் சினேக பிரியா, ஆவடி துணை ஆணையர் இமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா அடங்கிய சிறப்புப் புலனாய்வு குழுவை அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதைக் கண்டித்து அறவழியில் போராடிய நாம்தமிழர் உறவுகளையும் ,சீமான் அவர்களையும் கைது செய்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரிய செயல்.
நேற்று தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் அவர்களின் கைதும், இன்று நாம்தமிழர் மற்றும் அதிமுக கட்சியினர் கைதும் திமுக அரசின் கொடுங்கோன்மையின் உச்சம்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது பொள்ளாச்சி பாலியல் குற்றங்களுக்காக போராடிய திமுக
ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு போராடுபவர்களை கைது செய்து அடக்கி ஒடுக்கும் இந்த இரட்டை நிலைப்பாடென்பது மக்களை ஏமாற்றும் கேவலமான செயல்.
தொடர்ச்சியாக அறவழிப்போராட்டங்களுக்கு அனுமதி மறுப்பதும்,
கருத்துரிமையின் கழுத்துகளை நெரிப்பதுமான பாசிச திமுக ஆட்சிக்கு மக்கள் விரைவில் முடிவுரை எழுதுவார்கள்.
அறவழிப் போராட்டங்களுக்கும் கருத்துரிமை,பேச்சுரிமைகளுக்கு எதிரான போக்கினை திமுக அரசு தொடர்ச்சியாக செய்து மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரான நிலைப்பாடோடு நடந்துகொண்டால் ஒட்டு மொத்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்புகளையும் ஒருங்கிணைத்து நாடு தழுவிய மாபெரும் போராட்டத்தினை தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கம் முன்னெடுக்கும் என தமிழர் ஒருங்கிணைப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பொறியாளர்.
செ.வெற்றிக்குமரன் அறிக்கை விடுத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.