சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் அங்குள்ள 63 கடைகள் தீயில் கருகின. சுமார் 2 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்.
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அவர்கள் கன்னியாகுமரியை சுற்றி பார்த்துவிட்டு இங்கு வந்த ஞாபகார்த்தமாக இங்கிருந்து பொருட்களை வாங்கிச் செல்வதற்காக பேன்சி கடைகள், பொம்மை கடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ஹோட்டல்கள் என கன்னியாகுமரி பகுதியில் ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.
இந்நிலையில் திரிவேணி சங்கமம் மற்றும் காந்தி மண்டபம் பகுதியில் இன்று அதிகாலை அளவில் தீப்பற்றி எரிவதாக கன்னியாகுமரி தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல் தீயணைப்பு நிலையங்களில் இருந்து 3 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர்.
அதற்குள் தீ கட்டுக்கு அடங்காமல் மளமளவென பரவி காட்டுத்தீ போல் எரிந்தது. இதனால் அங்கிருந்த 63 கடைகள் முற்றிலும் எரிந்து நாசமாயின. இதில் ஹோட்டல்கள், பேன்ஸி கடைகள், எலக்ட்ரானிக்ஸ் கடைகள், பொம்மை, சங்கு, துணி போன்ற கடைகள் மற்றும் கடைகளில் உள்ள ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட பொருள்கள் முற்றிலும் எரிந்து சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
எனினும் தீயணைப்பு வீரர்கள் தீ மேலும் பரவாமல் போராடி தடுத்தனர். தீ விபத்து மின்சாரக்கசிவினால் ஏற்பட்டதா? அல்லது எவ்வாறு பிடித்தது? என்று கன்னியாகுமரி போலிசாரும், தீயணைப்பு துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கடை உரிமையாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.