
குமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு கேக் வெட்டினார். இதில் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் கலந்துகொண்டனார்.
இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:
உலகை ரட்சிக்க தேவதூதன் அவதரித்த நாளை கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடுகிறார்கள். ஒவ்வொரு மக்களும் விசுவாசத்துடன், ஏசுவின் போதனைகளை கடைபிடித்து வாழ வேண்டும். நம் எதிரில் துன்பத்துடன் இருக்கும் நபர்களுக்கு அருகில் சென்று இயன்ற உதவியை செய்ய வேண்டும்.
கிறிஸ்தவ நிறுவனங்கள் ஏழை மக்களுக்கு கல்வி, மருத்துவம் என சேவை செய்வதை நான் அறிவேன். அம்மா அருமனை வந்தபோது கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.
ஜெருசலேம் செல்ல 20000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ஜெருசலேம் செல்ல ரூ.37000 ஆக உயர்த்தி ஆணையிட்டுள்ளேன். சிறுபான்மை மக்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. தேங்காப்பட்டணம் மீன்பிடித்துறைமுகம் 77 கோடி விரிவாக்க பணிக்காக ஒதுக்கப்பட்டு பணி நடந்துவருகிறது.
என் ஊருக்கும் எடப்பாடிக்கும் 14 கிமி. பவானிக்கு 23 கி.மி ஆற்றை கடந்துதான் செல்ல வேண்டும். அங்கு மருத்துவமனை இல்லை, டாக்டரும் இல்லை. அதை உணர்ந்து கடந்த 14-ம் தேதி தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்கை அறிவித்தேன்.
அதிமுக அரசிற்கு எம்மதமும் சம்மதம். நாம் மற்றவர்களிடம் எதை எதிர்பார்க்கிறோமோ அதையே நாம் மற்றவர்களுக்கு செய்ய வேண்டும். சிலர் வேண்டுமென்றே அரசின் மீது திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். அவர்கள் அரசின் மீது கூறும் அபாண்ட குற்றச்சாட்டுகளை இயேசுபிரான் பார்த்துக் கொள்வார்.
தமிழகத்தில் 2011-ல் மின்வெட்டு இருந்தது. அம்மா மின்வெட்டை நீக்கினார்கள். நாங்கள் உபரி மின்சாரத்தை ஏற்படுத்தினோம். முதலமைச்சர் என்பது பணிதான். உங்களில் ஒருவனாக நான் பேசுகிறேன். பதவி ஆசை தேவை, பதவி வெறி இருக்கக்கூடாது. அது கண்ணை மறைத்துவிடும் என்று இவ்விழாவில் பேசினார்.