குவைத் தீ விபத்து: 2 வாரத்தில் ஊர் திரும்ப இருந்த காட்டுமன்னார்கோயிலை சேர்ந்தவர் உயிரிழந்த பரிதாபம்

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த சின்னதுரை

கடலூர்: குவைத் தீ விபத்தில் காட்டுமன்னார்கோயில் பகுதியைச் சேர்ந்தவர் உயிரிழந்தார். இரண்டு வாரங்களில் சொந்த ஊர் திரும்பும் நேரத்தில் நடந்துள்ள இச்சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள அகமதி கவர்னரகத்துக்கு உட்பட்ட மங்கஃப்பில் உள்ள 6 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியாகியுள்ளனர். இதில் 5 தமிழர்கள் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள முட்டம் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சின்னதுரை (42) என்பவர் குவைத் விபத்தில் உயிரிழந்தார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சின்னதுரைக்கு திருமணமாகி 5 வருடம் ஆகிறது. இவருக்கு சத்யா என்ற மனைவி உள்ளார் குழந்தைகள் கிடையாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக குவைத்தில் பணியாற்றி வந்த நிலையில், குடும்பத்தினருடன் இருப்பதற்காக வேலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கே முன்பு தான் சொந்த ஊருக்கு திரும்பி குடும்பத்தினருடன் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், மீண்டும் குவைத் கம்பெனியிலிருந்து அழைப்பு வந்ததால், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மீண்டும் குவைத் சென்று வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் அவர் 2 வாரங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு வருவதாக இருந்துள்ளார். இந்த நிலையில் அவர் தீ விபத்தில் உயிரிழந்தது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து அவரது மனைவி சத்யா கண்ணீருடன் கூறுகையில், “எனது கணவர் சின்னதுரை உடலை சொந்த ஊருக்கு உடனடியாக கொண்டு வர, தமிழக முதல்வரும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,” என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Leave a Reply

error: Content is protected !!