மதுரையில் லாரி டிரைவரை வழிமறித்து கத்தியைக் காட்டி பணம் பறித்த பாமக மாவட்ட செயலாளர் உள்ளிட்ட 4பேரை போலிசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகேயுள்ள பூச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் வயது(36). அப்பகுதியில் உள்ள கிரஷர் நிறுவனத்தில் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு பூச்சம்பட்டியிலிருந்து லாரியில் வந்து கொண்டிருந்த போது அவ்வழியாக கார் ஒன்றில் வந்த பாமக மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் நவீன்குமார், வாடிப்பட்டி ஒன்றியச் செயலாளர் கார்த்தி, மாவட்ட துணைச் செயலாளர் சீனி என்ற ராஜேந்திரன், சொக்கலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த சசி உள்ளிட்ட 4பேர் லாரியை வழிமறித்து டிரைவரிடம் அரிவாளைக் காட்டி மிரட்டி அவர் சட்டைப்பையிலிருந்த 7ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு எங்களுக்கு மாமூல் தராமல் தொழில் செய்ய முடியாது என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக லாரி ஓட்டுநர் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில், வாடிப்பட்டி போலிசார் வழக்குப்பதிவு செய்து பாமக மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர் நவீன்குமார் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும் வழிப்பறிக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.