பூதப்பாண்டி அருகே ரோட்டோரமாக உள்ள பள்ளத்தில் சிக்கி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன் கோணத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி நேற்று காலை அரசு பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. பூதப்பாண்டியை அடுத்த அழகிய பாண்டியபுரம் திருப்பத்தில் வரும்போது எதிரே லாரி ஒன்று வந்தது. பஸ்சுக்கு வழி விடுவதற்காக லாரி டிரைவர் லாரியை சாலையின் இடது புறமாக திருப்பினார். அப்போது அந்தப் பகுதியில் ஏற்கனவே குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு சாலை போடாமல் வெறும் மண்ணை மட்டும் போட்டு நிரப்பி சமன் செய்யப்பட்டிருந்தது. இதனால் சாலை ஓரம் திரும்பியதும் மண்ணில் புதைந்த லாரி அதிக பாரம் காரணமாக தீடீரென பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்த டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். டிரைவர் லாரியின் முன் பக்கம் வழியாக வெளியேறி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். விபத்துக்குள்ளான லாரி டிரைவர் தப்பி ஓடியது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உடனடியாக பொதுமக்கள் இதுகுறித்து பூதப்பாண்டி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர. தகவலின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசார் லாரியில் இருந்தது என்ன என்பதை அறிய வேண்டி தார்ப்பாயை விலக்கிப் பார்த்தபோது அவற்றில் அரிசி மூட்டைகள் இருந்தன. அதை பரிசோதனை செய்தபோது அவை ரேஷன் அரிசி என்பது தெரிய வந்தது.
உடனடியாக போலீசார் வட்ட வழங்கல் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். இந்த லாரி கேரளா பதிவு எண் கொண்டதாகும். தொடர்ந்து நடந்த விசாரணையில் அந்த லாரி தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திக் கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியில் இருந்த அரிசி மூடைகளை அதிகாரிகள் கைப்பற்றி ஆரல்வாய்மொழியில் உள்ள அரசு உணவு கிடங்கிற்கு அனுப்பிவைத்தனர். இவற்றில் மொத்தம் பத்து டன் அரிசி இருக்கலாம் என கூறப்படுகிறது. லாரி பதிவு எண் மூலமாக அதன் உரிமையாளர் மற்றும் தப்பி ஓடிய டிரைவர் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.