
டாக்டர்.லிஜி விஜய்
உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வு மக்களிடையே அதிக அளவில் வளர்ந்து வருகிறது. உடல்நலம் சீராக மருத்துவர்கள் உடற்பயிற்சி செய்ய பரிந்துரைக்கின்றனர். குறிப்பாக பெண்களிடம் உடற்பயிற்சி குறித்து பெருமளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பெண்கள் தங்கள் குறிப்பிட்ட உடற்பயிற்சி தேவைகளை கற்றுக்கொடுக்க, செயல்படுத்த பெண் உடற்பயிற்சியாளர்களை நாடுகிறார்கள். ஆனால் இந்த துறையில் பெண் பயிற்சியாளர்கள் அதிகம் இல்லை என்பதே உண்மை. இந்த வெற்றிடத்தை சரிசெய்ய பெண் உடற்பயிற்சியாளர்கள் அதிகம் தேவை என்பதே தற்போதைய நிலை.
ஒரு பெண், உடற்பயிற்சியாளராக பணிபுரிவது மற்றவர்களுக்கு கற்று கொடுக்கும் வாய்ப்பு மட்டுமல்ல, தனிப்பட்ட மற்றும் நிதி நிறைவுக்கான வழிகாட்டியாகவும் திகழ்கிறது.
ஏன் பெண் பயிற்சியாளர்களை தேர்வு செய்கிறார்கள்
உடற்பயிற்சி மேற்கொள்ள விரும்பும் பல பெண்கள், ஒரு பெண் உடற்பயிற்சியாளரிடம் கற்றுகொள்ளவது மிகவும் ஊக்கமாகவும், பாதுகாப்பாகவும் உணர்கிறார்கள். சௌகரியம், தொடர்புத்தன்மை மற்றும் அவர்களின் குறிப்பிட்ட உடற்பயிற்சி தேவைகள் மற்றும் சவால்கள் பற்றிய ஆழமான புரிதல் ஆகியவற்றின் காரணமாக பெண்கள் பெரும்பாலும் பெண் உடற்பயிற்சியாளர்களை நாடுகிறார்கள்
பெண் உடற்பயிற்சியாளர்கள், பெண்களின் தனித்துவமான சவால்கள் மற்றும் குறிக்கோள்களைப் புரிந்துகொண்டு, ஆதரவான, ஊக்கமளிக்கும் சூழலை வளர்க்கிறார்கள். இது துறையில் பெண் நிபுணத்துவத்திற்கான வலுவான தேவையை உருவாக்குகிறது.
துறை வாய்ப்புகள்
பெண் உடற்பயிற்சியாளருக்கான வாய்ப்புகள் பரந்த அளவில் உள்ளன. சிறந்த பயிற்சியகத்தில் உடற்பயிற்சி கல்வி குறித்து கற்றுக் கொண்டு, “அங்கீகரிக்கப்பட்ட உடற்பயிற்சியாளர்” சான்று பெற வேண்டும். இதன் மூலம் தனிநபர் உடற்பயிற்சியாளர் மற்றும் உடற்பயிற்சி மையத்தில் குழு பயிற்சியாளராக பணியாற்றலாம்.
தற்போது அனைத்து மருத்துவமனைகளிலும், அரசு தொடங்கியுள்ள உடற்பயிற்சி கூடங்கள், தனியார் கூடங்களில் பணியாற்றலாம். அத்துடன் பொது மருத்துவர்கள், இயல்முறை மருத்துவர்கள் மற்றும் உணவியல் நிபுணர்கள் உடன் இணைந்து பணியாற்றலாம் உடற்பயிற்சி துறைகளின் மற்ற துறை பயிற்சிகளான யோகா மற்றும் பிளாத்திஸ் களிலும் பயிற்றுவிப்பாளராகவும் திகழலாம்.
தொழில்–முனைவோர்
உடற்பயிற்சி துறை, ஆர்வம் மற்றும் புதுமைகளால் வளர்ந்து வருகின்றது. சரியான பயிற்சி தகுதிகளுடன், பெண்கள் சொந்த உடற்பயிற்சி ஸ்டுடியோ, ஆன்லைன் பயிற்சி தளம் அமைக்கலாம் அல்லது சொந்த உடற்பயிற்சி திட்டத்தை உருவாக்கலாம்.
தனிப்பட்ட முறையில் தேவைகேற்ப உடற்பயிற்சி அளிப்பது இந்த துறையின் சிறப்பாகும். குறிப்பாக வீட்டிற்கே சென்று வயதானவர்களுக்கு கற்றுக்கொடுப்பது, பெண்களுக்கு உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு பயிற்சி அளிப்பது. உடல் பருமன் சார்ந்த பயிற்சி அளிப்பது, உடல் எடை குறைக்க, சிறப்பு குழந்தைகளுக்கான பயிற்சிகள் அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபடலாம். மேலும் பிரபலங்களுக்கு சிறப்பு பயிற்சி அளிப்பது மற்றும் நேர கணக்கில் பயிற்சி அளித்து வருமானம் பெறுவதும் சாத்தியமே.
அத்துடன் தற்காப்பு கலைகளுடன் உடற்பயிற்சி கற்று கொடுப்பதால் அதிக வருமானம் பெறலாம். இந்த துறையில் பெண்கள், அவர்களே முதலாளியாக இருப்பதற்கான சுதந்திரத்தை வழங்குவதுடன் அவர்களே தங்கள் வாழ்க்கையை வடிவமைக்க உதவுகிறது.
சுய பலன்கள்:
இந்த துறையில் மட்டும் தான், ஒருவர் சிறந்து விளங்க தங்ககளை கட்டாயம் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற்றமடைய செய்யும், உடற்பயிற்சி நுட்பங்கள் மற்றும் மன அழுத்த மேலாண்மை பற்றிய அறிவைப் பெறுவார்கள், இவை அனைத்தும் பெண்கள் தங்கள் சொந்த நல்வாழ்வுக்கு பங்களிக்கின்றன.

வருமானம்:
இத்துறையில் சேர குறைந்தது பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அத்துடன் “அங்கீகரிக்கப்பட்ட உடற்பயிற்சியாளர்” சான்றிதழ் பெற்று நுழைவு நிலை உடற்பயிற்சியாளராக பணி சேர்ந்து சுமார் ரூ. 20,000 முதல் 40,000 வரை ஆரம்ப சம்பளத்தை எதிர்பார்க்கலாம். பெண்கள் அனுபவத்தைப் பெறும்போது, வாடிக்கையாளர்களை உருவாக்கி, கூடுதல் சான்றிதழ்களைப் பெறுவர். மேலும் பெண்களின் வருமானம் கணிசமாக அதிகரிக்கிறது. அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் தங்கள் சேவைகளுக்கான பிரீமியம் கட்டணங்களையும் எதிர்பார்க்கலாம்.
வெளிநாட்டில் வாய்ப்புகள்:
தகுதி வாய்ந்த உடற்பயிற்சியாளர்களுக்கான தேவை எல்லா நாடுகளிலும் தேவைப்படுகிறது,. குறிப்பாக வளைகுடா நாடுகளில் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. சரியான சான்றிதழ்கள் மற்றும் மொழி திறன்களுடன், பெண்கள் வெளிநாட்டில் வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். உடற்பயிற்சி வகுப்புகளை கற்பிப்பது அல்லது ஆன்லைன் பயிற்சியை வழங்குவது புதிய கலாச்சாரங்கள் மற்றும் அனுபவங்களுக்கு கதவுகளைத் திறக்கும்.
மகளிர் மேம்பாடு:
ஒரு பெண் உடற்பயிற்சியாளர் பணி தேர்வு செய்வது என்பது உடற்பயிற்சி சார்ந்தது மட்டுமல்ல; அது பெண்கள், பொது வாழ்வில் முன்னேற்றத்திற்கு வாய்ப்பு மற்றும் மேன்மை அடைதல் எனலாம். அதுமட்டுமன்றி. மற்றவர்களின் முழு உடற்திறனை அடைய ஊக்குவிப்பதோடு, சாதனை மற்றும் தன்னம்பிக்கை உணர்வை வளர்ப்பார்கள் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.