புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, காலா, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா இன்று கொரோனா தொற்று காரணமாக மறைந்தார்.
சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படம் மூலம் பிரபலமான நடிகர் நிதிஷ் வீரா, புதுப்பேட்டை உள்ளிட்ட சில படங்களில் நடித்துவந்தார்.

Advertising
இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து அசுரன் படத்தின் தெலுங்கு ரிமேக்கிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி உடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான நிதிஷ், சென்னை ஓமந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(மே 17) காலை 6.30 மணியளவில் உயிரிழந்தார். இயக்குனர் அருண் ராஜா காமராஜின் மனைவி கொரோனாவுக்கு பலியான செய்தி வந்த சில மணிநேரங்களில் நடிகர் நிதிஷின் கொரோனா மரணமும் திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
