

சபரிமலையில் களை கட்டும் புரட்டாசி மாத பூஜை – சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு மத்தியில் பக்தர்கள் சாமி தரிசனம்..!
புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை (16ம் தேதி) திறக்கப்பட்டது. நாளை 21ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
ஒவ்வொரு மலையாள மாதத்தின் தொடக்கத்திலும் சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு, 5 நாட்கள் வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, புரட்டாசி மாத வழிபாட்டுக்காக நடை திறக்கப்பட்டது.
தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி கோவில் நடையை மாலை 5 மணிக்கு திறந்து வைத்தார். தொடர்ந்து 18-ம் படிக்கு கீழ் உள்ள கற்பூர ஆழியில் தீ மூட்டப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து தற்போது வரை வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், நெய்யபிஷேகம், படி பூஜை உள்பட அனைத்து பூஜைகள் நடைபெற்று வருகிறது. 5 நாள் நடைபெறும் சிறப்பு பூஜை, வழிபாடுகளுக்கு பிறகு 21-ந் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மேலும் இன்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் உலக புகழ்பெற்ற சபரிமலையில் சர்வதேச ஐயப்ப பக்தர்கள் முதல் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உட்பட கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, மும்பை உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்கின்றனர். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்.
ஐயப்ப பக்தர்கள் சங்கமம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கூறியதாவது:-
ஐயப்ப பக்தர்கள் சங்கமத்திற்கான முன்பதிவு 15-ந் தேதியுடன் முடிவடைந்தது. மொத்தம் விண்ணப்பித்த 4,865 பேரில் முதலில் விண்ணப்பித்த 3 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் தவிர தென்மாநில மந்திரிகள், முக்கிய பிரமுகர்கள் இந்த சங்கமம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது என அவர் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.