ஒரே இரவில் 3 கடைகளில் அடுத்தடுத்து கொள்ளை..மர்மநபர்கள் கைவரிசை:பொதுமக்கள் அச்சம்.

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மர்ம நபர்கள் ஒரே இரவில் மூன்று கடைகளை உடைத்து கொள்ளையடித்துச் சென்றது பொதுமக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குமரி மாவட்டத்தில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி போன்றவை தொடர்ந்து நடந்த வண்ணம் இருந்து வருகிறது. மாவட்ட காவல்துறை சார்பில் எவ்வளவோ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் இந்த குற்றச் செயல்கள் நின்றபாடில்லை. ஆங்காங்கே தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பொட்டல்குளம் அருகிலுள்ள உள்ள ஒரு வீட்டில் பகலில் கொள்ளையர்கள் புகுந்து 57 பவுன் நகையை திருடிச் சென்றனர். அதனைத் தொடர்ந்து மயிலாடியில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஹோட்டலில் ஷட்டரை உடைத்து உள்ளே சென்று ரூபாய் 3000 திருடிச் சென்றனர்.

இந்நிலையில் அஞ்சுகிராமம் அருகே செண்பகராமபுத்தை சேர்ந்தவர் மகேஷ்.36. இவர் கடந்த மூன்று வருடமாக அஞ்சுகிராமம் வழுக்கம்பாறை மெயின் ரோட்டில் சங்கரலிங்கபுரம் சந்திப்பில் மளிகை கடை நடத்தி வருகிறார். தினமும் காலை 6 மணிக்கு கடையை திறந்து விட்டு இரவு 10 மணிக்கு பூட்டிச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் இன்று காலை வந்து பார்க்கும்போது பூட்டுகள் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. மேலும் சுமார் 5000 ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பாக்கெட்டுகள் திருடப்பட்டிருந்தது. கல்லாப் பெட்டியில் இருந்த ரூபாய் 3000 திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து அவர் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை வைத்து கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல் அஞ்சுகிராமம் கன்னியாகுமரி மெயின்ரோட்டில் வாரியூர் சந்திப்பில் உள்ள முட்டை குடோன் மற்றும் ஆக்கர் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை. முட்டை கடையில் சுமார் 25-க்கும் மேற்பட்ட முட்டை தட்டுகள் கொள்ளை போயுள்ளது. ஆக்கர் கடையில் கல்லாப்பெட்டியை இரும்புக் கம்பி கொண்டு உடைத்து ரூபாய் 5000 மற்றும் கூடுதல் விலை மதிப்புள்ள ஆக்கர் பொருட்களும் கொள்ளை போயுள்ளது.

இப்படி ஒரே நாளில் இரண்டு இடங்களில் மூன்று கடைகளை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. எனவே மாவட்ட காவல்துறை நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி இரவு நேரங்களில் கூடுதல் போலீசார் ரோந்து பணிக்கு நியமித்து குற்றச் செயல்களை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

error: Content is protected !!