சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் நியமனத்தில் ஒப்பந்த முறையை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் தொழிலாளர்கள் சம்மேளனம் (ஏஐடியுசி) வலியுறுத்தியுள்ளது. அதோடு, ஏஐடியுசி முதல்வருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளது.
இது தொடர்பாக சம்மேளன பொதுச்செயலாளர் ஆர்.ஆறுமுகம் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த ஆட்சியின் போது போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் கோரிக்கையை முன்வைத்து 10 ஆண்டுகளுக்கு மேலாக போராடினோம். திமுக ஆட்சி அமைந்ததும் தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டதன் மீது நம்பிக்கை கொண்டு, வேலைநிறுத்தம் உள்ளிட்டவற்றை முடிவுக்கு கொண்டு வந்தோம்.
இந்நிலையில் அத்தியாவசிய கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியிருக்கிறது. அதன்படி, 15-வது ஊதிய ஒப்பந்தத்தை பேசி முடிக்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் வரவு செலவு பற்றாக்குறைக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும். சம்பளத்தில் பிடித்தம் செய்யும் தொகையை உரிய இனங்களில் செலுத்த வேண்டும். காலிப்பணியிட விவகாரத்தில் ஒப்பந்த முறையைக் கைவிட்டு நேரடி நியமனம் மூலம் பூர்த்தி செய்ய வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 104 மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கும் ஓய்வூதியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அளிக்க வேண்டும். பாரபட்சமின்றி இலகு பணி, கல்வி தகுதிக்கேற்ற வாரிசுப் பணி போன்றவற்றை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் LEMOORIYA NEWS தமிழ் – ஐ இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.