கன்னியாகுமரி: தமிழ்நாடு தலித் பாதுகாப்பு உரிமை இயக்கம் சார்பில் வேளாண் மசோதாவை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வயல்வெளியில் இறங்கி விவசாயிகளுடன் நூதன போராட்டம் நடத்தினர்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் தமிழகத்தில் வேளாண் திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் விவசாய சங்கங்கள், விவசாய அமைப்புகள், அரசியல் கட்சியினர் என பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தமிழ்நாடு தலித் பாதுகாப்பு உரிமைகள் இயக்கம் சார்பாக வேளாண் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக 50 விவசாயிகளுடன் பூதப்பாண்டி அருகே நடு வயலில் இறங்கி போராட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு தலித் பாதுகாப்பு உரிமைகள் இயக்க இளைஞர்கள், விவசாயிகள், மகளிர் அமைப்பினர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் வயல் வழியில் இறங்கி மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்ட நிறுவனத் தலைவர் வை தினகரன் கூறுகையில், மத்திய மாநில அரசுகள் இதற்கு மேலும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்க வில்லை எனில் கன்னியாகுமரி மாவட்ட விவசாயிகள் அனைவரையும் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்றார்.